பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 107

பிக்ஷுணிச் சங்கம்

ஆனால், பிரஜா கெளதமி தேவியாரும் மற்றும் சில ஸ்திரீகளும் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டு, மஞ்சள் ஆடை அணிந்து, கால் நடையாக வைசாலி நகரத்திற்குப் பகவரை நாடிச் சென்றார்கள். வழி நடந்ததால் கால்கள் வீங்க, புழுதிபடிந்த ஆடையுடன் அவர்கள் அழுது கொண்டே பகவன் புத்தர் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்களைப் பகவரின் அணுக்கத் தொண்டரான ஆனந்தமகாதேரர் கண்டு, அவர்களிடம் சென்று, அவர்கள் வந்த காரணத்தையறிந்து. பகவன் புத்தரிடம் சென்று செய்தியைக்கூறி, அவர்களுக்காகப் பரிந்து பேசினார்.

பகவர், தமது பௌத்தச் சங்கத்தில் மகளிரைச் சேர்க்க விரும்பவில்லை. ஆனால், ஆனந்த மகாதேரர், பிரஜா கௌதமியார், புத்தருடைய குழந்தைப் பருவத்தில் போற்றி வளர்த்ததைச் சுட்டிக்காட்டி, அவரைச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டினார். அதன் மேல் பகவர் பிக்குணிகளுக்கென்று எட்டுவிதமான கடமைகளை வகுத்து அக்கடமைகளை ஏற்றுக்கொண்டால் பிக்குணிகள் சங்கத்தில்சேரலாம் என்று உத்தரவு கொடுத்தார். அந்தக் கடமைகளை ஏற்றுக்கொண்டபடியால் அந்த ஸ்திரீகள், சங்கத்தில் பிக்குணிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

பகவன் புத்தர் ஸ்திரீகளைச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ள உடன்பட்ட போதிலும் அதனால் நேரிடப் போகிற தீமையை நன்கு உணர்ந்தார். அவர் ஆனந்த மகாதேரரிடம், "பௌத்தசங்கத்திலே ஸ்திரீகள் சேர்க்கப்படாமல் இருந்தால், பௌத்த தர்மம் ஆயிரம் ஆண்டுகள் நிலைபெற்றிருக்கும். ஸ்திரீகள் சேர்க்கப்படுவதனாவே தர்மம் இப்போது ஐந்நூறு ஆண்டுகள்தான் நிலைத்திருக்கும் " என்று அருளிச்செய்தார்.

இராசமாதேவி கேமை

வைசாலியிலிருந்து ததாகதர் சிராவத்திக்குச் சென்று அங்கு கார்காலத்தைக் கழித்தார். பின்னர் இராசகிருகம் திரும்பிவந்தார். வந்து வெளுவனத்தில் தங்கியிருந்தபோது, விம்பசார அரசன் மனைவியாகிய கேமை என்பவள் பௌத்த உபாசிகையானாள். கேமை, தான் மிகவும் அழகுள்ளவள் என்னும் இறுமாப்பினாவே பகவன் புத்தரிடம் வர விரும்பவில்லை. விம்பசார அரசன் பகவரைக் காண வரும்போத இவ்வரசியையும் வரும்படி அழைப்பார்.