பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 109

மக்களின் முன்பும் தமது இருத்தி சக்தியினாலே அற்புதத்தைச்செய்து காட்டினார்.

ததாகதர் செய்த அற்புதம்இது. ததாகதர் ஆகாயத்திலேகிழக்கு மேற்காகக் கீழ்க்கோடி முதல் மேற்குக் கோடிவரையில் ஒரு பெரிய சாலையை உண்டாக்கினார். அந்தச் சாலையின்மேல் ததாகதர் நின்று உலாவினார். உலாவிக் கொண்டிருந்தபோது சிவந்த நிறம் தோன்றியது. பிறகு அந்நிறம் பொன்நிறமாக மாறி உலகமெங்கும் பிரகாசித்தது. அங்கிருந்து பகவன் புத்தர் தர்மோபதேசம் செய்தார். கீழிருந்த அத்தனை ஜனங்களும் அவ்வுபதேசத்தைக் கேட்டு நான்கு வகையான உண்மைத் தத்துவத்தை உணர்ந்து கொண்டார்கள். இதனைக் கண்ட அறுவகைச் சமய குருமார்களும் திகைப்படைந்தார்கள். அவர்களால் இதுபோன்ற இருத்தியைச் செய்ய முடியவில்லை. அப்போது பகவன் புத்தர், "சூரியன் இல்லாதபோது மின்மினிகள் மின்னுகின்றன. சூரியன் வந்தபோது மின்மினிகள் இருந்த இடம் தெரியாமல் போகின்றன" என்று கூறினார். அறுவகைச்சமயக்குருமார்களில் ஒருவராகிய பூரணகாசிபர் என்பவர், ஒரு புதுமையைச் செய்யத் தொடங்கினார். அது கைகூடாமற் போயிற்று. ஆகவே அவர் வெட்கமடைந்து கனமுள்ள ஜாடியொன்றைக் கழுத்தில் கட்டிக்கொண்டு ஆற்றில் விழுந்து அமிழ்ந்து உயிரைவிட்டார்.

புத்தர்கள் ஏதேனும் பெரிய புதுமைகளைச் செய்தால், உடனே அவர்கள் முப்பத்து மூன்று தேவர்கள் வாழும் தேவலோகத்துக்குப் போவது வழக்கம். அந்த முறைப்படி, பகவன் புத்தரும் அற்புதத்தைச் செய்த பிறகு, தமது திருவுருவத்தை நிழல்போல விட்டுவிட்டுத் தேவலோகம் சென்றார். தமது திருத்தாயாரான மாயாதேவியார் வாழும் தேவலோகத்துக்குச் சென்று அறநெறியைப் போதித்தார். தெய்வலோகத்தில் பகவன் புத்தர் இருந்தபோது, பூலோகத்திலே அவர் உபதேசம் செய்ய வேண்டியபடியால் அவர் விட்டுப்போன அவருடைய திருவுருவம் தினந்தோறும் பிக்ஷைக்குச் சென்று மக்களுக்கு உபதேசம் செய்து வந்தது. இவ்வாறு மூன்று திங்கள் பகவன் புத்தர் தேவலோகத்தில் தங்கியிருந்தார். பிறகு சக்கரன் (இந்திரன்) ஒருபுறமும் பிரமன் ஒருபுறமும் வர அவர்களின் இடையே பகவன் புத்தர் பூலோகத்துக்கு வந்தார்.

பொய்க் குற்றச்சாட்டு

பௌத்த மதத்திற்கு ஏற்பட்ட வெற்றியினாலும் தங்களுக்கு உண்டான தோல்வியினாலும் அவமானமும் பொறாமையும்