பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி. வேங்கடசாமி / 111

சங்கத்தில் சச்சரவு

புத்த பதவியடைந்த ஒன்பதாம் ஆண்டு, கார்காலத்தில் கோசிகன் என்பவருடைய கோசிகாராமத்தில் தங்கியிருந்தபோது பிக்கு சங்கத்தில் சச்சரவு உண்டாயிற்று. ஒரு பிக்கு தம்மையறியாமலே விநய ஒழுக்கத்திலே ஏதோ சிறு தவறு செய்துவிட்டார். அதை ஒரு பிக்கு கண்டித்தார். இதனால், பிக்குகள் இரு பிரிவினராகி சச்சரவு செய்தார்கள். இதையறிந்த பகவன் புத்தர், அவர்களை அழைத்து அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றார். அவர்களுக்குத் தீகாவு என்பவன் கதையைச் சொல்லி சச்சரவு செய்யக்கூடாது என்று போதித்தார். ஆனால், அவர்கள் அதைக் கேளாமல் முன்போலவே சச்சரவு செய்தார்கள். அதனால் வெறுப்படைந்த பகவன் புத்தர், இவர்கள் சமாதானப்பட மாட்டார்கள் என்று கண்டு, அவர்களுக்குச் சில சூத்திரங்களை ஓதிய பிறகு, அவர்களை விட்டுத் தனியே ஓரிடத்திற்குப் போய்விட்டார். அவர் பாலகலோணகார என்னும் கிராமத்திற்குச் சென்றார். அங்கே அவர் பகுதேரரைக் கண்டார். பிறகு, பாசீனவம்ஸதாய என்னும் வனத்திற்குச் சென்றார். அங்கு அநுருத்தர், நந்தியர், கீம்பளர் என்னும் மகாதேரர்கள் இருந்தார்கள். அவர்கள் பகவரை வரவேற்று உபசரித்தார்கள். அங்குத் தங்கி அறவுரை நிகழ்த்திய பிறகு அங்கிருந்து ஒரு காட்டிற்குச் சென்று தன்னந்தனியே யோகம் செய்துகொண்டிருந்தார்.

தனிவாசம்

தன்னந்தனியே ஏகாந்தவாசமாக இருந்தபோது, அவ்விடத்திற்கு ஒரு யானை வந்தது. காட்டில் வெகு தூரத்துக்கப்பால் யானைக் கூட்டங்களுடன் இந்த யானை வசித்துக் கொண்டிருந்தது. ஆனால், இந்த யானைக்கு மற்ற யானைகள் பலவிதமாகத் துன்பங்கள் செய்து கொண்டிருந்தன. இதனால் வெறுப்படைந்த இந்த யானை அக்கூட்டத்திலிருந்து பிரிந்துவந்து தன்னந்தனியே வேறு ஒரு இடத்தில் வசித்துக்கொண்டிருந்தது. பகவன் புத்தர் இக்காட்டிற்கு வந்தபோது இந்த யானை நாள்தோறும் காய்கனி கிழங்குகளைக் கொண்டுவந்து அவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தது.இந்த யானையினுடைய உணர்வையும் அன்பையும் கண்ட பகவர் இதைப்பற்றி ஒரு சூத்திரத்தை அருளிச் செய்தார். இவ்வாறு சில காலம் காட்டில் தனியே தங்கியிருந்த பிறகு ததாகதர் அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சிராவத்தி நகரம் சென்றார்.