பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 / புத்தரின் வரலாறு

உண்மை உணர்ந்து, தங்கள் அறியாமைக்கு வருந்தி, பகவன் புத்தரிடம் சென்றார்கள். தேவதத்தன் விழித்தெழுந்து நடந்ததையறிந்து ஆத்திரத்தினாலும் கோபத்தினாலும் இரத்தம்கக்கி இறந்து போனான்.

அஜாதசத்துரு அரசன், தான் தனது தந்தையாகிய விம்பசார அரசனைக் கொன்ற குற்றம் அவன் மனத்தில் உறுத்தியது. அவனுடைய மனச்சாட்சி அவனைத் துன்புறுத்தியது. அவன் மனம் அமைதி இல்லாமல் வருந்திற்று. தனது மனத்தை அமைதியாக்கிக் கொள்ள எண்ணி அவன் பல சமயத் தலைவர்களிடம் சென்றான். அவர்கள் போதனை அவனுக்குச் சாந்தியை உண்டாக்கவில்லை. கடைசியாக அரண்மனை வைத்தியனாகிய ஜீவகன் கூறிய யோசனையின்படி பகவன் புத்தரிடம் வந்தான். வந்து அவரிடம் தர்மம் கேட்டுப் பௌத்தனானான்.

பகவன் புத்தரின் எழுத்தொன்பது வயதுக்குப்பிறகு ததாகதர் வைசாலியிலிருந்து புறப்பட்டு வேலுவநகரம் சென்று சில நாள் தங்கினார். அங்கே இருக்கும்போது அவருக்கு உடம்பில் நோய் கண்டது. ஆனால் பகவர் அவற்றைப் பொறுத்துக்கொண்டார். தமது எண்பதாவது வயதில் தமக்குப் பரிநிர்வாணம் ஏற்படும் என்பதை அவர் அறிந்தார். பிறகு அவர் வழக்கம்போல் பல இடங்களுக்குச் சென்று அறநெறியைப் போதித்துக் கொண்டிருந்தார். பிறகு பாவாபுரிக்குச் சென்றார். அந்நகரத்துக் கருமானாகிய சுந்தன் என்பவனுடைய மாந்தோப்பில் தங்கினார்.

சுந்தன் அளித்த விருந்து

பகவன் புத்தர் தனது மாந்தோப்பிலே எழுந்தருளியிருப்பதை யறிந்துசுந்தன்விரைந்து வந்து பகவரை வணங்கி அடுத்த தாளைக்குத் தனது இல்லத்தில் உணவு கொள்ளும்படி அழைத்தான். பகவர் ஒத்துக்கொண்டார். சுந்தன் பலவித உணவுகளைச் சமைத்ததோடு காட்டுப்பன்றியின் இறைச்சியையும் சமைத்திருந்தான். பகவன் புத்தர் பௌத்த பிக்குகளுடன் சுந்தன் இல்லம் சென்றார். காட்டுப் பன்றியின் இறைச்சியை அன்போடு சமைத்துவைத்திருப்பதையறிந்த பகவன் புத்தர் அதனைப் பிக்குகளுக்குப் பரிமாறக் கூடாதென்றும் அதைக்கொண்டுபோய் புதைத்துவிட வேண்டும் என்றும், ஆனால் அன்போடு சமைக்கப்பட்ட அதைச் சுந்தனுடைய திருப்திக்காகத் ததாகதருக்கு மட்டும் பரிமாறலாம் என்றும் அருளிச் செய்தார். சுந்தன் அவ்வாறே செய்தான்.