பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணைப்பு - I

திரிபிடகம்

பௌத்தமத வேதங்களுக்குத் திரிபிடகம் என்பது பெயர். பாலிமொழியில் திபிடகம் என்று கூறுவர். அவற்றிற்கு விநய பிடகம், அபிதம்மபிடகம். சூத்திரபிடகம் என்று பெயர். இவை பாலி மொழியிலே எழுதப்பட்டுள்ளன.

புத்தர் பெருமான் நாற்பதைந்து ஆண்டுகளாகத் தமது கொள்கைகளை நாடெங்கும் போதித்து வந்தபோதிலும் அவர் அக்கொள்கைகளை நூல் வடிவமாக எழுதி வைக்கவில்லை. ஆனால் அவருடைய சீடர்கள், அவருடைய போதனைகளை இரண்டு சம்ஹிதைகளாகத் தொகுத்துப் பாராயணம்செய்து வந்தார்கள். அவற்றிற்கு விநய சம்ஹிதை, தர்ம சம்ஹிதை என்று பெயர். சம்ஹிதை என்றால் தொகுப்பு என்பதுபொருள்.

பகவன் புத்தர் நிர்வாண மோக்ஷம் அடைந்த சில தினங்களுக்குப் பிறகு, மகத நாட்டின் தலைநகரான இராசகிருக நகரத்துக்கு அருகில் ஸத்தபணி என்னும் மலைக்குகையிலே கார்காலத்தைக் கழிக்கும்பொருட்டு ஐந்நறு தேரர்கள் (பௌத்தத் துறவிகள்) ஒருங்கு கூடினார்கள். இதுவே பௌத்தரின் முதல் மகாநாடு ஆகும். புத்தரின் முக்கிய சீடர் ஆகிய மகாகாசிபர், இந்த மகாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். இம்மகாநாட்டிலே, புத்தர் பெருமான் அருளிச் செய்த விநய போதனைகளை உபாலி என்னும் தேரர் எடுத்து ஓதினார். இதற்கு விநயபிடகம் என்று பெயரிட்டனர். மற்றொரு தேரராகிய ஆனந்தர், புத்தர் அருளிச்செய்த தர்மபோதனைகளை இம்மகாநாட்டில் ஓதினார். இதற்குத் தம்ம (தர்ம) பிடகம் என்று பெயரிட்டனர். இவ்வாறு முதல் பௌத்த சங்கத்திலே, புத்தருடைய போதனைகள் இரண்டு பிடகங்களாகத் தொகுக்கப்பட்டன.

பிற்காலத்திலே, அபிதம்ம பிடகத்திலிருந்து சில பகுதிகளைத் தனியாகப்பிரித்து அதற்கு சூத்திரபிடகம் என்று பெயரிட்டார்கள். புத்தருடைய போதனைகள் இவ்வாறு மூன்று பிரிவாகத் தொகுக்கப்பட்டபடியினாலே இவற்றிற்குத் திரிபிடகம் என்று பெயர் உண்டாயிற்று.