பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 / புத்தரின் வரலாறு

ஆக்கத்தைத் தராததும் தீமையைப் பயப்பதும் ஆகிய செயல்களைச் செய்வது எளிது. நன்மையைத் தருகிற நல்ல காரியங்களைச் செய்வது மிக அரிது.

அசட்டையாயிராமல் விழிப்பாக இரு. அறத்தை முழுவதும் கைக்கொண்டு ஒழுகு. அறவழியில் நடப்பவர்கள் அவ்வுலகத்திலும் இவ்வுலகத்திலும் சுகம் அடைகிறார்கள்.

"பாவங்களைச் செய்யாதிரு. நல்லவற்றைச் செய். மனத்தைச் சுத்தப்படுத்து!" என்னும் இவை புத்தருடைய போதனையாக இருக்கின்றன.

புத்தரையும் தர்மத்தையும் சங்கத்தையும் சரணம் அடைந்து, நற்காட்சி பெற்று, நான்கு வாய்மைகளான துக்கம் துக்க காரணம் துக்க நீக்கம் துக்கம் நீக்கும்வழி ஆகிய இவைகளையும், துன்பத்தை நீக்குகிற மார்க்கத்துக்கு அழைத்துச் செல்கிற அஷ்டாங்க மார்க்கத்தையும் காண்கிறவர்கள் உண்மையான புகலிடத்தை யடைகிறார்கள். இதை அடைந்தவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.

கோபத்தை அன்பினால் வெல்க. தீமையை நன்மையினாலே வெல்க. கருமியைத் தானத்தினால் வெல்க. பொய்யை மெய்யினாலே வெல்க.

உண்மை பேசுவாயாக, சினத்தைத் தவிர்ப்பாயாக, உன்னிடம் இருப்பது மிகக் கொஞ்சமானாலும் யாசிக்கிறவர்களுக்கு அதை ஈவாயாக. இம்மூன்றையும் செய்கிற ஒருவர் தேவர்கள் இருக்கிற இடத்திற்குச் செல்கிறார்.

முற்றும் இகழப்படுபவரும் முற்றும் புகழப்படுபவரும் அன்றும் இல்லை, இன்றும் இல்லை, என்றும் இல்லை.

உடம்பினால் உண்டாகிற குற்றங்களை அடக்கிக் காத்துக்கொள். உடம்பை அடக்கி ஆள்க. உடம்பினால் உண்டாகும் தீய காரியங்களை விலக்கி நல்ல காரியங்களைச் செய்க.

வாக்கினால் உண்டாகும் குற்றங்களை அடக்குக, வாக்கினை அடக்கி ஆள்க. வாக்கினால் உண்டாகும் தீய சொற்களை விலக்கி நல்ல பேச்சுகளையே பேசுக.

மனத்தினால் உண்டாகும் குற்றங்களை அடக்குக. மனத்தை அடக்கி ஆள்க. மனத்தில் உண்டாகும் குற்றங்களை நீக்கி நல்ல எண்ணங்களையே எண்ணுக.