பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 23

வேண்டும் என்பது பந்தயம். சிலர் ஒரு பனைமரத்தையும் சிலர் நான்கு மரத்தையும் சிலர் ஐந்து மரத்தையும் ஊடுருவும்படி அம்பு எய்தனர். சித்தார்த்த குமாரன், எய்த அம்பு ஏழுமரங்களையும் துளைத்துக் கொண்டு அப்பால் சென்று தரையில் விழுந்து துண்டு துண்டாக ஒடிந்தது. இதைக் கண்டவர்கள் எல்லோரும் கைகொட்டி ஆரவாரம் செய்து புகழ்ந்தார்கள்.

பிறகு நீர் நிறைந்த ஏழு இரும்புக்குடங்களை வரிசையாகச் சமதூரத்தில் வைத்து, தீ பற்றிய நாரை அம்பில் கட்டி அந்த அம்பைக் குடங்களின் ஊடே எய்ய வேண்டும். ஏழு குடங்களையும் அம்பு துளைத்துச் செல்ல வேண்டும். நெருப்பும் அவியாமல் எரிய வேண்டும். வில் வீரர்கள் இவ்வாறு அம்பு எய்தபோது சிலர் ஒரு குடத்தையும், சிலர் இரண்டு மூன்று குடங்களையும், சிலர் ஐந்து ஆறு குடங்களையும் எய்தார்கள். சித்தார்த்த குமாரன் ஏழு குடங்களையும் ஊடுருவிச் செல்லும்படியும் நெருப்பு அனையாதபடியும் அம்பு எய்து வெற்ற பெற்றார்!

பிறகு, வாள் பந்தயம் நடந்தது. ஒரே வெட்டினால் ஏழு மரங்களைத் துண்டாக்க வேண்டும் என்பது பந்தயம். இந்தப் பந்தயத்திலும் சித்தார்த்த குமாரன் வெற்றிபெற்றார். ஒரேவீச்சினால் ஏழு மரங்களையும் வெட்டினார். ஆனால் வெட்டுண்ட மரங்கள் விழாமல் நின்றன. காற்று வீசியபோது வெட்டுண்ட மரங்கள் விழுந்தபோதுதான் ஏழு மரங்களும் வெட்டுண்டன என்பது தெரிந்தது!

இவ்வாறே குதிரை சவாரி செய்தல், மற்போர் செய்தல் முதலிய வீரர்க்குரிய பந்தயங்கள் எல்லாம் நடைபெற்றன. எல்லாப் பந்தயங்களிலும் சித்தார்த்த குமாரன் வெற்றி பெற்று எல்லோராலும் புகழப்பட்டார். தமது மகன் வெற்றி பெற்றதைக் கண்டு சுத்தோதன அரசர் அடங்காத மகிழ்ச்சி கொண்டார்.

அப்போது யசோதரை குமாரியின் தந்தையான மகாநாமர் சொன்னார்: "சித்தார்த்த குமாரனைப் படைக்கலப் பயிற்சியறியாதவர் என்று எண்ணியிருந்தேன். இப்போது, அவர் முதல் தரமான வீரர் என்பதை நேரில் கண்டேன். வெற்றிபெற்ற குமாரனுக்கு என் மகள் யசோதரையை மணம் செய்து கொடுக்க இசைகிறேன்" இவ்வாறு மகாநாமர் கூறியதைக் கேட்டு எல்லோரும் மகிழ்ச்சியாரவாரம் செய்தார்கள்.