26 / புத்தரின் வரலாறு
இன்ப வாழ்க்கையில் வெறுப்புத் தட்டியது. அவருடைய உள்ளத்தில் ஏதோ இரகசியச் செய்தி புலப்பட்டது. "குமாரனே! விழித்துக்கொள். தெளிவுகொள். நிலையற்ற அழிந்துபோகிற ஐம்புல இன்ப சுகங்களில் காலங்கழிக்காதே. நிலையாமையை உணர்ந்து நிலைபெற்ற இன்பத்தை நாடி மக்களுக்கு நல்வழி காட்டு. நீ வந்த வேலையை நிறைவேற்ற முற்படு" என்று ஏதோ ஒருகுரல் தன் உள்ளத்தில் கூறுவதுபோல் அவருக்குத் தோன்றிற்று.
இந்தக் குரல் நாளுக்கு நாள் உரத்த குரலாகக் கேட்பதுபோல் தோன்றியது. அழகிய இளமங்கையரின் இன்னிசைப் பாடல்களைக் கேட்கும்போதும் இதே குரல் அவர் காதில் கேட்டது. யாழின் அமிழ்தம் போன்ற இன்னிசையிலும் இதே குரல் இவர் உள்ளத்தைத் தூண்டியது. வேய்ங்குழலின் தீஞ்சுவை நாதத்திலும் இக்குரல் கேட்டது. ஆடல் பாடல்களிலும் நாட்டிய நடனங்களிலும் இச்செய்தியே இவர் மனத்தில் பதிந்தது.
அரசபோகங்களிலும் இல்லற வாழ்க்கையிலும் அவர் உள்ளம் வெறுப்படைந்தது.
சுத்தோதனர் கண்ட கனவுகள்
ஓர் இரவில், சுத்தோதன அரசர் கண்ணுறங்கியபோது அவருக்குச் சில கனவுகள் தோன்றின. அன்றிரவு அவர் கண்ட கனவுகள் இவை:
தேவேந்திரனுடைய கொடிபோன்ற பெரிய கொடியொன்றை, எண்ணிறந்த மக்கள் கூட்டமாகச் சூழ்ந்து தூக்கிக்கொண்டு கபிலவத்து நகரத்தின் வழியாகச் சென்று கிழக்கு வாயில் வழியாகப் போனார்கள்.
சித்தார்த்த குமாரன் அமர்ந்திருந்த தேரைப் பத்துப் பெரிய யானைகள் இழுத்துக்கொண்டு நகரத்தின் தென்புற வாயில் வழியாகச் சென்றன.
நான்கு வெண்ணிறக் குதிரைகள் பூட்டப்பட்ட உன்னதமான தேரிலே சித்தார்த்த குமாரன் அமர்ந்து நகரத்தின் மேற்குவாயில் வழியாகச் சென்றார்.
நவமணிகள் பதிக்கப்பட்ட பெரிய சக்கராயுதம் ஒன்று சுழன்ற வண்ணம் ஆகாயத்தில் பறந்து நகரத்தின் வடக்குப்புற வாயில் வழியாகச் சென்றது.