பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 / புத்தரின் வரலாறு

அடக்கம் செய்யச் சுடுகாட்டிற்குக் கொண்டு போகிறார்கள். எல்லோரும் ஒரு காலத்தில் சாக வேண்டியவர்களே"

பிணத்தின் காட்சியை தேர்ப்பாகனின் விளக்கமும் சித்தார்த்த குமாரனின் சிந்தனையைத் தூண்டிவிட்டன. மேலும் சற்றுத் தூரம் சென்றபோது, தலையை மழித்துக் காவியுடை அணிந்திருந்த சந்நியாசி ஒருவரை சித்தார்த்த குமாரன் கண்டார்; கண்டு இவர் என் இந்தக் கோலமாக இருக்கிறார் என்று சன்னனைக் கேட்டார்.

"மூப்பு,பிணி, மரணம் என்னும் மூன்று விதமான உலக இயல்பைக் கண்டு, மக்கள் வாழ்க்கை துன்பமுடையது என்பதை அறிந்து, பிறவித் துன்பத்தை நீக்குவதற்காகத் துறவுபூண்டு இவர் தியானம் செய்துகொண்டிருக்கிறார்" என்று சன்னன் கூறினான்.

சுத்தோதன அரசர் எந்தெந்தக் காட்சிகளைச் சித்தார்த்த குமாரன் காணக்கூடாதென்று காவல் வைத்தாரோ அந்தக் காட்சிகள் எல்லாம் தெய்வச் செயலாக அரசகுமாரன் கண்களில் தோன்றிவிட்டன!

சித்தார்த்தரின் சிந்தனை

தாம் கண்ட இக்காட்சிகளைப் பற்றிச் சித்தார்த்த குமாரன் தமக்குள் இவ்வாறு எண்ணினார்: மனிதராகப் பிறந்த மக்கள் மூத்துக் கிழவராகி நரை திரையடைகிறார்கள். முதுமையடைந்த இவர்களை மக்கள் இகழ்ந்து வெறுக்கிறார்கள். எல்லோருக்கும் நரை திரை மூப்பு வருகிறது. ஆகையால் கிழத்தன்மையைக் கண்டு அருவெறுப்புக் கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் நினைத்தபோது அவருக்கிருந்த யௌவன மதம் (இளமையைப் பற்றிய பற்று) அவர் மனத்தைவிட்டு நீங்கியது.

பிறகு நோயாளிப் பற்றி நினைத்தார். நோயும் பிணியும் எல்லோருக்கும் வருகின்றன. பிணியாளர்களைக் கண்டால் மற்றவர்கள் வெறுப்படைகிறார்கள். அவ்வாறு வெறுப்பது தவறு. நமக்கும் பிணிவரக்கூடும் என்பதை உணரவேண்டும் என்று நினைத்தார். அப்போது அவருக்கிருந்த ஆரோக்கிய மதம் (உடல் நலப்பற்று) அவரை விட்டு நீங்கியது.

பின்னர், பிணத்தைப் பற்றி நினைத்தார். சாவு எல்லோருக்கும் ஏற்படுகிறது. ஆனால், அதை உணராதவர்கள் பிணத்தைக் காணும்போது அதை வெறுத்து அருவெறுப்படைகிறார்கள். அவ்வாறு வெறுப்பது தவறு என்று எண்ணியபோது, அவருக்கிருந்த ஜீவித மதம் (வாழ்க்கைப்பற்று) அவரைவிட்டு அகன்றது.