பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 37

இச்செய்தியைக் கேட்டு அரண்மனையில் இருந்த எல்லோரும் அழுது புலம்பினார்கள். சிறிது தாயாராகிய மகாபிரஜாபதி கௌதமி, கன்றை இழந்த பசுவைப் போலக் கதறினார். யசோதரையாரின் துக்கத்தைச் சொல்ல முடியாது. செய்தி கேட்ட சுத்தோதன அரசர் இடியோசை கேட்ட நாகம் போன்று மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டார். முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளித்து விசிறிகொண்டு மெல்ல விசிறினார்கள். மூர்ச்சை தெளிந்து கண் விழித்தார்."குமாரா! உன்னைப்பிரிந்து எப்படி உயிர் வாழ்வேன். ஐயோ! திரும்பி வரமாட்டாயா?" என்று கதறினார். அப்போது அமைச்சர்கள் வந்து அரசருக்கு ஆறுதல் கூறினார்கள். "மகாராஜா! கவலைப்படுவதில் பயன் இல்லை. இப்படி நடக்கும் என்பது முன்னமே தெரிந்ததுதானே. அசித முனிவரின் தீர்க்கதரிசனம் மெய்யாய்விட்டது. வினையை வெல்ல யாரால் ஆகும்? நடப்பது நடந்தே தீரும்" என்று கூறித் தேற்றினார்கள். ஆனால், இச்சொற்கள் அரசரின் செவியில் ஏறவில்லை. "என் அருமை மகனை அழைத்து வாருங்கள். உடனே போய் அழைத்து வாருங்கள்" என்று ஆவலாகக் கூறினார்.

அரசருடைய துயரத்தைக்கண்ட அமைச்சர்கள் "நாங்கள் போய் குமாரனை அழைத்து வருகிறோம். மகாராஜா, கவலைப்படாமல் இருங்கள்" என்று தேறுதல் கூறி அமைச்சர்கள் புறப்பட்டுச் சித்தார்த்த குமாரனைத் தேடிச்சென்றார்கள்.

அரசகுமாரன் துறவுபூண்டு வெளியேறிய செய்தி கேட்டு நகரமக்கள் எல்லோரும் கவலையில் ஆழ்ந்தனர். தங்கள் குடும்பத்தில் அன்புக்குரிய ஒருவர் பிரிந்துபோனது போலக் கருதி அவர்கள் துயரம் அடைந்தார்கள். கபிலவத்து நகரம் துன்பத்தில் மூழ்கியது. ஆயினும், அமைச்சர்கள் அரசகுமாரனை அழைத்துவரச் சென்றிருப்பதனாலே, குமாரன் திரும்பி வருவார் என்னும் நம்பிக்கை எல்லோருக்கும் ஆறுதல் அளித்தது.

இராசகிருகம் சென்றது

அனோமை ஆற்றங்கரையை விட்டுச் சென்ற கெளதம தபசி - துறவு பூண்ட சித்தார்த்த குமாரனைக் கெளதம தபசி என்று அழைப்போம் – கால்நடையாகச் சென்று அநுபிய நகரத்தையடைந்தார். நகரத்திற்குள் செல்லாமல் அருகிலிருந்த