பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 / புத்தரின் வரலாறு

மாந்தோப்பினுள் சென்று மன அமைதியோடு தங்கியிருந்தார். பிறகு. மாஞ்சோலையை விட்டுப் புறப்பட்டு நடந்து சென்றார். எட்டாவது நாளில் இராசக்கிருக நகரத்தையடைந்தார். நகரத்தின் கிழக்கு வாயில் வழியாக நகரத்திற்குள் சென்று, வீடு வீடாகப் பிச்சை ஏற்றார். தெருவில் இவரைக் கண்டவர்கள் "இவர் யார்; இவர் யார்?" என்று வியப்புடன் கேட்டார்கள். சிலர், "இவர் மன்மதன் என்றார்கள். சிலர் இவர் சந்திரகுமாரன்” என்றார்கள். சிலர், "இல்லை, இல்லை; இவர் சூரிய குமாரன்" என்றார்கள். மற்றும் சிலர், இவர் "சூரியகுமாரன் அல்லர்; பிரமன்" என்றார்கள். அறிவுள்ள சிலர், "இவர் மனிதராகப் பிறந்த புண்ணிய புருஷர்; இவர் மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய மகான்" என்று சொன்னார்கள்.

அப்போது அரசனுடைய சேவகர் இவரைக்கண்டு வியப்படைந்து அரசனிடம் விரைந்து சென்று, தேவ! துறவி ஒருவர் நகரத்திற்குள் வந்து வீடுவீடாகப் பிச்சை ஏற்கிறார். அவரைப் பார்த்தால் தேவகுமாரனோ நாககுமாரனோ கருட குமாரனோ அல்லது மனித குமாரன் தானோ, யார் என்று கூறமுடியவில்லை" என்று தெரிவித்தார்கள். அரசன் அரண்மனையின் உப்பரிகையில் சென்று தெருவில் பிச்சை ஏற்கும் கௌதம துறவியைப் பார்த்தார். துறவியின் கம்பீரமான தோற்றத்தையும், அமைதியும் பொறுமையுமுள்ள நிலைமையும் கண்டு வியப்படைந்தார். பிறகு அரசன் சேவகரைப் பார்த்து, இவர் தேவகுமாரனாக இருந்தால், நகரத்தைவிட்டு நீங்கும்போது ஒருவருக்கும் தெரியாமல் திடீரென மறைந்து விடுவார். நாக்குமாரனாக இருந்தால் பூமிக்குள் மறைந்துவிடுவார். கருடகுமாரனாக இருந்தால் ஆகாயத்தில் மறைந்துவிடுவார். மனிதனாக இருந்தால் தம்மிடம் உள்ள உணவை உட்கொள்வார். நீங்கள் போய் இவரைக் கூர்ந்து பார்த்து இவர் செய்கையை அறிந்துவந்து சொல்லுங்கள்" என்று கூறி அனுப்பினான். அரசன் உத்தரவுப்படியே சேவகர்கள் சென்றார்கள்.

வீதியிலே வீடுவீடாகச் சென்று பிச்சை ஏற்ற கெளதம துறவி, போதுமான உணவு கிடைத்தவுடன், தாம் வந்த வழியே நகரத்தைவிட்டு வெளியே வந்தார். வந்தவர் சற்றுத் தொலைவில் உள்ள பண்டவ[1] மலைக்குச்சென்று அதன் அடிவாரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்தார். தாம் பிச்சை ஏற்றுக்கொண்டு வந்த உணவை உண்ணத் தொடங்கினார். பிச்சைச்சோறு அவருக்கு அருவெறுப்பை உண்டாக்கிற்று. இவ்வித எளிய உணவைக் கண்ணினாலும் கண்டிராத


  1. பண்டவமலை என்பது வெளிறிய மஞ்சள் நிறமான மலை என்பது பொருள்.