பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 3

முகவுரை

லகத்திலே அதிகமாகப் பரவிச் சிறப்புற்றிருக்கிற பெரிய மதங்களிலே பௌத்த மதமும் ஒன்று. புகழ்பெற்ற பெளத்த மதத்தை உண்டாக்கிய பெரியார் பகவன் கௌதம புத்தர் ஆவார். நமது பாரத நாட்டிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்தபடியினாலே பாரத நாடு பௌத்தர்களின் புண்ணிய பூமியாகும். பகவன் புத்தர் பிறந்து இப்போது 2500 ஆண்டுகள் ஆகின்றன. இந்த விழாவைப் பௌத்த உலகம் கொண்டாடுகிறது.

உலகப் பெரியாரான கெளதம புத்தர் நமது நாட்டில் பிறந்த சிறந்த பெரியார் என்கிற காரணத்தினாலேயும், பெளத்த சமயப் புண்ணியத் தலங்கள் இங்கு உள்ளன என்னும் காரணத்தினாலேயும், பாரத நாட்டினராகிய நாம் பெருமிதம் கொள்கிறோம். இக்காரணங்கள் பற்றியே, பகவன் புத்தர் பிறந்த 2500 -ஆவது ஆண்டுவிழாவை, 1956 ஆம் ஆண்டு மே 24 -ஆம் தேதி வைசாகப் பெளர்ணமியாகிய புண்ணிய நாளிலே, அரசாங்கத்தாரும் பொது மக்களும் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.

இந்தப் புண்ணிய நாளிலே பகவன் புத்தருடைய சரித்திர வரலாற்றை எழுதி வெளிப்படுத்துவது மிகவும் பொருத்தமானதே. இப்போது நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பீரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு.