பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 / புத்தரின் வரலாறு

எழுந்தருளி அறநெறியைப் போதித்தருள வேண்டும்" என்று கூறி விம்பசாரன் கௌதமரை வணக்கமாக வேண்டிக் கொண்டான். கௌதமர் அவ்வாறே வருவதாக வாக்களித்தார். கௌதமரை வணங்கி அரசன் அரண்மனைக்குச் சென்றான்.

பார்க்கவ ஆசிரமம்

துன்பம் நீங்கிய இன்பமான சாந்தி நிலையடைவதைக் குறிக்கோளாகக் கொண்ட கௌதமர், பண்டவமலையை விட்டுப் புறப்பட்டார். அவர் நேரே பார்க்கவ முனிவருடைய ஆசிரமத்தையடைந்து அங்குச் சிலகாலம் தங்கினார். பார்க்கவ முனிவர் கௌதமருக்குத் தமது கொள்கைகளை உபதேசம் செய்தார். கௌதமர் தாம் நாடியிருக்கும் வீட்டு நெறிக்குப் பார்க்கவருடைய உபதேசங்கள் உதவி செய்வன அல்ல என்று கண்டுஅவ்வாசிரமத்தை விட்டுப் போய்விட்டார்.

ஆளார ஆசிரமம் சென்றது

பார்க்கவ ஆசிரமத்தை விட்டுச் சென்ற கௌதமர் வைசாலி நாட்டின் பக்கமாகச் சென்றார். அங்கு ஒரு ஆசிரமத்தில். பல சீடர்களுக்கு ஆசிரியராக இருந்த ஆளார காலாமர் என்னும் முனிவரிடம் சென்றார். காவாம கோத்திரத்தைச் சேர்ந்தவராகிய ஆளார முனிவர் ஏழுவிதமான ஸமாபத்திகளை (தியானங்களை)க் கைவரப் பெற்றவர். இவரையடைந்த கௌதமர் இவரிடம் சீடராக அமர்ந்தார். ஆளாமர் இவருக்குத் தமது ஸமாபத்தி முறைகளை உபதேசம் செய்தார். ஆளாமர் சொல்லிய முறைகளைக் கைக்கொண்டு கௌதம முனிவர் அவற்றின்படி ஒழுகி ஏழு ஸமாபத்திகளையும் அடைந்தார். இதையறிந்த ஆளார முனிர் கெளதம முனிவரைத் தமக்குச் சமமாக வைத்துத் தமது சீடர்களில் சரிபகுதியினரை இவருக்குச் சீடராகக் கொடுத்தார். அன்றியும் தம்மை நாடி வருகிறவர்களைக் கௌதமரிடம் அனுப்பி தம்மைப் போலவே இவரையும் சிறப்புச் செய்து வணங்கும்படி இவருக்கும் குருபதவியையளித்தார். ஆனால், கைவரப்பெற்ற ஏழுவிதமான ஸமாபத்தியினாலும் தாம் நாடியுள்ள மோக்ஷ நிலையை அடைய முடியாது என்று அறிந்த கௌதம முனிவர் இந்த ஆசிரமத்தை விட்டுப் போய்விட்டார்.