பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 49

ஆகையினாலே இப்பொழுதே இவரிடம் சென்று சில யோசனைகளைக் கூறி இவர் மனத்தைக் கலைத்து இவருடைய கடுமையான தவத்தை நிறுத்துவேன்."

இவ்வாறு தனக்குள் எண்ணிக்கொண்ட வசவர்த்திமாரன், கௌதம முனிவரிடம் வந்தான். வந்து இவ்வாறு கூறினான். "அன்பரே! தங்கள் உடல் பெரிதும் மெலிந்துவிட்டது. உடலின் நிறமும் மாறிவிட்டது. மரணம் உம்மை நெருங்கியிருக்கிறது. நீர் செய்யும் அப்பிரணத்தியானம் முதலிய தபசுகள் உம்முடைய மரணத்திற்குக் காரணமாக இருக்கின்றன. நீர் ஏன் இறக்க வேண்டும்? இறப்பதைவிட உயிர்வாழ்வது எவ்வளவோ மேன்மையானது. உயிருடன் இருந்தால் நல்ல புண்ணிய காரியங்களைச் செய்யலாம். பிரமசரியனாகவும் இருக்கலாம். அக்கினி பூசையும் செய்யலாம். அக்கினி பூசை செய்தால் உம்முடைய புண்ணிய காரியங்கள் அதிக பலனடையும். கடுமையாகத் தியானம் செய்வது தக்க பலன் அளிக்காது என்று உமக்கே இப்போது ஐயமுண்டாகிறது. இதற்கு முன்பு போதிசத்துவர்கள் புத்த பதவியடையச் சென்ற மார்க்கங்கள் எல்லாம் மிகவும் கடினமாக இருந்தன. நீர் ஏன் வீணாக முயற்சி செய்கிறீர்? இந்தக் கடுமையான முயற்சிகள் உமக்கு மரணத்தைத்தான் கொடுக்கும். இதை நீர் விட்டுவிடும்" என்று கூறி போலியான அன்பைக் காட்டி இனிமையாகப் பேசினான்.

வசவர்த்திமாரனுடைய பொய்யன்பையும் போலிப்பேச்சையும் கேட்ட கௌதம முனிவர் அவனிடம் வெறுப்புக்கொண்டார். அவனைப் பார்த்து இவ்வாறு கூறினார். "மனவுறுதியற்ற சோம்பேறிகளை வசப்படுத்தும் மாரனே! என்னுடைய இந்த முயற்சியைக் கெடுத்து அழிப்பது உனக்கு ஊதியம்தரும் என்று எண்ணி இங்கு வந்து இந்த வார்த்தைகளைக் கூறினாய். நி புகழ்ந்து பேசுகிற அக்கினி பூசை முதலியவைகளில் பலன் ஒன்றும் இல்லை என்பது எனக்குத் தெரியும். அவை யாருக்குப் பயன்படுமோ அவர்களிடம் அதைக் கூறு.

"முயற்சி, ஊக்கம், அறிவுடைமை, முதலான பஞ்ச இந்திரியங்கள் (ஐந்து குணங்கள்) என் மனத்தில் உள்ளன. இந்த நல்ல குணங்கள் நிறையப்பெற்று மிகவும் முயற்சியுடன் இருக்கிற என் மனத்தை நிர்வாண மோக்ஷம் அடைவதற்காக அர்ப்பணம் செய்து இருக்கிறபடியினாலே, உலகில் வாழ வேண்டியதைப்பற்றிய கவலை எனக்கில்லை.