பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 / புத்தரின் வரலாறு

"நான் அப்பிரணத் தியாகங்களைச் செய்ததனாலே ஏற்பட்ட வாயுவானது ஆறுகளின் நிரையும் வற்றச் செய்யக்கூடியது. அப்படிப்பட்ட வாயு என் உடம்பிலுள்ள இரத்தத்தை வற்றச் செய்யாமல் இருக்குமா? இரத்தம் வற்றினால் பித்தமும் சிலேத்துமமும் சதையும் வற்றிப்போகும். அப்போது மனமானது மிக்க ஒளியுடன் இருக்கும். மனமும், அறிவும், தியானமும் (சமாதியும்) மிக உறுதியாக அசையாமல் நிற்கும். என் மன உறுதியையறியாமல் நீ என் உடம்பை மட்டும் பார்த்துவிட்டு, தேகம் மெலிந்துபோயிற்று என்கிறாய். உறுதியோடும் முயற்சியுடனும் பாவனா தியானத்தோடு இருக்கிற என்னுடைய மனோ முயற்சியைக் கலைக்க உன்னால் முடியாது. உடல் மெலிந்தபோதிலும் என் முயற்சியைவிட்டுத் திரும்பிப்போய் அரசபோகங்களையும் இன்ப சுகங்களையும் அனுபவிக்க என் மனம் விரும்பாது.

"ஒ, மாரனே! உன்னை நான் நன்கு அறிவேன்.உன்னிடம் பலமுள்ள பத்துவிதமான சேளைகள் உள்ளன. காமம் என்பது உன்னுடைய முதல் படையாகும். குண தர்மங்களில் (நல்ல குணங்களில்) வெறுப்புடைமை உன்னுடைய இரண்டாவது சேனை. பசியும் தாகமும் உன்னுடைய மூன்றாம் படை. உணவு முதலியவற்றை அடைய முயற்சி செய்வது உனது நான்காவது படை. மன உறுதியில்லாமை என்பது உன்னுடைய ஐந்தாம்படை. அச்சமுடைமை என்பது உன்னுடைய ஆறாவது சேனையாகும். நன்மை தீமைகளைப் பகுத்துணர முடியாமல் ஐயப்படுவது உனது ஏழாவது படையாகும். பிறருடைய நற்குணங்களை மறைப்பதும் நல்லுபதேசங்களை மதியாமலிருப்பதும் உன்னுடைய எட்டாவது படை. பொருள் ஆசையும் மானம் (கர்வம்) உடைமையும் உன்னுடைய ஒன்பதாம் சேனை. தன்னைப் பெரிதாக மதித்து மற்றவரை அவமதிப்பது உன்னுடைய பத்தாவது சேனை. ஓ, மாரனே! இந்தப் பத்துப் பாவகாரியங்களும் உன்னுடைய பலமான சேனைகள் ஆகும். உன்னுடைய இந்தப் பத்துச்சேனைகளைக் கொண்டு நீ பிராமணர்களுக்கும் சிரமணர்களுக்கும் துன்பத்தை உண்டாக்குகிறாய்.

உறுதியற்ற பலவீனமான மனத்தை உடையவர்கள் இந்தச் சேனைகளினாலே உனக்குத் தோல்வி அடைகிறார்கள். உறுதியான பலமுள்ள மனத்தையுடையவர்கள் உன்னை வெற்றி கொள்கிறார்கள். இந்த வெற்றியினாலேதான் ஏகாந்த சுகம் கிடைக்கும். நான் வெற்றி பெறாமல் திரும்புவேன் என்று நினைக்காதே. இந்தக் கிலேச[1]


  1. கிலேசம் - மளக்குற்றம்