பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 / புத்தரின் வரலாறு

வைத்து வணங்கினாள். "சுவாமி! இந்தப் பாயசத்தை இப்பாத்திரத்தோடு தாங்கள் ஏற்றுக்கொண்டருள வேண்டும். அடியேனுடைய எண்ணம் நிறைவேறியதுபோன்று தங்களுடைய உள்ளக் கோரிக்கையும் நிறைவேறுவதாக" என்று கூறி அவரை மும்முறை வலம்வந்து வணங்கி வீடு சென்றாள்.

சுஜாதை போன பிறகு கௌதம முனிவர் பாயசப் பாத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நேரஞ்சர ஆற்றங்கரைக்குச் சென்றார். சென்று சுப்பிரதிஷ்டை என்னும் பெயருள்ள துறையருகில் ஒரு மாமரத்தின் கீழே பாத்திரத்தை வைத்துவிட்டுத் துறையில் இறங்கி நீராடிக் கரைக்கு வந்து சீவரஆடையை அணிந்துகொண்டார். பின்னர் மர நிழலிலே அமர்ந்து பாயசத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக நாற்பத்தொன்பது சிறு கவளங்களாக உட்கொண்டார். பிறகு, "நான் புத்த பதவியையடைவது உறுதியானால், இந்தப் பாத்திரம் நீரோட்டத்திற்கு எதிராகச் செல்லட்டும்" என்று தமக்குள் கருதிக்கொண்டு அந்தப் பாத்திரத்தை ஆற்று நீரிலே வீசி எறிந்தார். நீரிலே விழுந்த அந்தப்பாத்திரம் நீரோட்டத்தை எதிர்த்துச் சிறிது தூரம் சென்றபிறகு கிறுகிறுவென்று சுழன்று நீரில் அமிழ்ந்து விட்டது. இதைக்கண்ட போதிசத்துவர் தமக்குப் புத்த பதவி கிடைப்பது உறுதி என்று அறிந்துகொண்டார்.

பிறகு போதிசத்துவர், அழகு வாய்ந்த புனிதமான பத்திரவனம் என்னும் இடத்திற்குச் சென்றார். அந்த வனத்திலே சால மரங்கள் பசுமையான இலைகளுடனும் நறுமணமுள்ள மலர்களுடனும் இனிய காட்சியளித்தன. இச்சோலைக்குச் சென்ற போதிசத்துவராகிய கௌதம முனிவர், தாம் முன்பு ஆளாரர், உத்ரகர் என்னும் தாபசர்களிடம் கற்ற எட்டு சமாபத்திகளாலும் ஐந்து அபிஞ்ஞைகளாலும் ஆறு ஆண்டுகளாகத் தாம் செய்துவந்த அப்பிரணத் தியானம் முதலியவைகளினாலும் தமது மனத்தில் ஏற்பட்டிருந்த மலிளங்களையெல்லாம் நீங்கிச் சுத்தப்படுத்திக் கொண்டார். அதாவது, சித்தலிசுத்தி (மனத்தைச் சுத்தம்) செய்துகொண்டார்.