பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 81

"பிக்குகளே! இவைதாம் ததாகதர் கண்டறிந்த மத்திமவழி. இது ஞானத்தையும், அமைதியையும் (சாந்தியையும்) சம்புத்தியையும், நிர்வாணமோக்ஷத்தையும் அளிக்கிறது:

"துக்க சத்தியம்: - பிக்குகளே! பிறப்பு துன்பமானது. மூப்பு துன்பமானது. நோய் துன்பமானது. இறப்பு துன்பமானது. நம்மால் வெறுக்கப்படும் பொருள்கள் துன்பந்தருகின்றன. நாம் விரும்பிய பொருள் கிடைக்காமற்போனால் துன்பம் உண்டாகிறது. சுருங்கக் கூறினால், ஐம்புலன்களினாலே உண்டாகிற ஆசைகளினாலே துன்பங்கள் உண்டாகின்றன.

"துக்கோற்பத்தி சத்தியம். (சமுதய சத்தியம்): - பிக்குகளே! பிறப்புக்குக். காரணமாகிற வேட்கைகளும் அவற்றோடு தொடர்புடைய காமசுகங்களும் ஆசைகளும் துக்கத்தைத் தருகின்றன. இவை காமதிருஷ்ணா (சிற்றின்பத்தில் ஆசை), பவதிருஷ்ணா (வாழ்க்கையில் ஆசை), விபவதிருஷ்ணா (செல்வங்களில் ஆசை என்று மூன்று வகைப்படும். இவை சமுதய சத்தியம் எனப்படும்.

"துக்கநிவர்த்தி சத்தியம்: (நிரோத சத்தியம்):- பிக்குகளே! அவா என்னும் வேட்கையை அடியோடு நீக்க வேண்டும்.அவாவை மனம் வாக்கு காயங்களினால் நிகழாமல் தடுக்க வேண்டும். அவாவை நீக்குவதே துக்க நிவர்த்தி (நிரோத சத்தியம்) என்று கூறப்படும்.

"நிவர்த்தி மார்க்கம்: (மார்க்க சத்தியம்) :- பிக்குகளே! நற்காட்சி, நல்லெண்ணம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி நல்கடைப்பிடி, நற்சமாதி என்னும் இவை எட்டும் துக்க நிவாரண மார்க்கம் எனப்படும்.

"துக்க சத்தியஞானம்:- அப்போது இதற்கு முன்பு ஒருவராலும் கண்டறியப்படாத துக்க சத்தியம் என்கிற ஞானம் எனக்குத் தோன்றியது. பிறகு இந்த ஞானத்தை அறிய வேண்டும் என்னும் கிருத்திய ஞானம் உண்டாயிற்று. அதனை ஆராய்ந்து அறிந்தபிறகு, துக்க சத்தியத்தை நன்றாக அறிந்தேன் என்கிற கிருத[1] ஞானம் தோன்றியது.

"சமுத சத்தியத்தில் சத்தியஞானம்: -பிக்குகளே! பிறகு, துக்க சமுதய சத்தியம் என்னும் ஞானம் தோன்றியது. அதை நன்கு அறிய வேண்டும் என்னும் கிருத்திய ஞானம் தோன்றி, அந்தச் சமுதய சத்தியத்தை (திருஷ்ணையை) நிக்கவேண்டும் என்னும் ஞானம் தோன்றியது. பின்னர் அந்தச் சமுதயத்தை (திருஷ்ணையை) நான் நீக்கி விட்டேன் என்கிற கிருதஞானம் தோன்றியது.

  1. கிருத்திய, கிருதம என்பதற்கு முறையே செய்த, செய்கின்ற என்பது பொருள்