பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பமும்-சிலைகளும் சிற்பிகளும், சித்திரக்காரர்களுமாகிய கலைஞர்கள் தங்கள் கைத்திறத்தாலும், கற்பனை வளத்தாலும், அன்றிருந்த புத்தரின் அமர உருவத்தை இன்றும் நாம் கண்டு களிக்கும்படி அமைத்து வைத்திருக்கிறார்கள். கற்களிலும், கற்பாறைச் சுவர்களிலும் அவர்கள் புத்த சரிதையை அழியாத காவியமாகச் செதுக்கியும் வரைந்தும் வைத்திருக்கிறார்கள். எத்தனை சிலைகள் எத்தனை சிற்பங்கள் எத்தனை எத்தனை சித்திரங்கள். ஆசிய நாடுகள் பலவற்றிலும் வாழ்ந்த பெருமை மிக்க கலைஞர்களின் உள்ளங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கெளதமர் தமக்கே உரிமையாய்க் கொண்டிருந்தார் என்று கூறலாம். வாழ்க்கையில் நற்காலம் வரும் என்று நன்னம்பிக்கைக்கு இடமின்றிப் போதி வேந்தர் 'துக்கம், துக்கம்!' என்ற அழுங்கும் மனப்பான்மை ஏற்படும்படி போதித்து விட்டார் என்பதாகச் சிலர் குறை கூறுவர். இது தவறு. உயிரோடிருக்கும்போதே அழுங்கியழுங்கிச் சாகும்படி அவர் போதிக்கவில்லை. வாழ்க்கை துக்கமென்பதை அவர் மறுக்கவில்லை, மறைக்கவுமில்லை. ஆனால் இந்தத் துக்கத்திரையைக் கிழித்தெறிந்து, 'இன்றே, இப்பொழுதே இந்த உலகிலேயே விடுதலை பெறலாம்!' என்று போதித்த பெருந்தகை அவர். ஆகவே மன்பதைக்கு அருள் சுரந்து அவர் ஊட்டிய நம்பிக்கை கலைஞர்கள் உள்ளங்களையும் தன் வயப்படுத்திக் கொண்டது இயற்கையேயாகும். கெளதர் கட்டுப்பாடான வாழ்க்கையையும், உயர்ந்த ஒழுக்கத்தையும் வற்புறுத்தி வந்தார். ஆசைகளைக் களைந்தெறியும்படி அறிவுறுத்தினார். இவ்வளவு கடுமையான தவநெறியைப் போதித்தவரிடம் கலைஞர்கள் தம் ட...,.,..,. பறி கொடுத்ததன் மர்மம் என்ன? அதுவே புத்தருடைய அருள் எவ்வளவு கண்டிப்பான விதிகளைக் கூறினாலும், அவர் உள்ளத்தில் அன்பு வற்றாமல் பொங்கி வழிந்தோடிக் கொண்டேயிருந்தது. பச்சைக் குழந்தைபோல் அவர் மக்கள், விலங்குகள், பிற உயிர்கள் ஆகிய எல்லோரையும், எல்லாவற்றையும் நேசித்தார். கார்முகில் போல் கருணை மழை பொழிந்து வந்தார். வளநாடு பூச்சொரியும்படி வாய் திறந்து அறம் புகன்று, மன்னுயிரெல்லாம் தம்முயிர்போல் வாழச் செய்தார். இந்தக் கருணை வெள்ளத்திலே கலைஞர்களும் மிதக்க ஆரம்பித்து விட்டார்கள் மேலும், சித்திரத்திற்கும், சிலைகளுக்கும், கதைக்கும் கவிதைக்கும் சாக்கிய முனிவரின் சரிதையைப் பார்க்கிலும் மேலாகக் கற்பனையிலே கூட ஒரு கதையைக் கண்டுபிடிப்பது அரிது. அந்த வாழ்க்கையிலே எத்தனை விசித்திரமான மாறுதல்கள், எத்தனை சம்பவங்கள், உணர்ச்சிகள், சோகச் சுடர்கள், பயங்கரமான தியாகங்கள் இவைகளை ப. ராமஸ்வாமி 27