பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயத்தில் சேர்ந்த பேரறிஞர். அச்சமயம் பற்றி இவர் எழுதிய பல நூல்களில் பதினாறுவரை அகப்பட்டிருக்கின்றன. புகழ் பெற்ற பல அறிஞர்கள் இவரோடிருந்து, நாகார்ஜுன கொண்டாவில் சர்வகலாசாலை நடத்தி, அறிவொளியைப் பரப்பி வந்தனர். இந்தத் தலத்திலுள்ள புதை பொருள்களைத் தோண்டிப் பார்க்கையில், சர்வகலாசாலைக் கட்டிடங்கள் பல சேதியங்கள், ஸ்தூபங்கள், மண்டபங்கள், அரண்மனை முதலியவற்றின் சிதைவுகள் காணப்படுகின்றன. புத்தர் தோன்றிய பின்னால் ஆயிரம் ஆண்டுகள்வரை இந்திய நாடு மகோன்னத நிலையில் இருந்து வந்தது. அவருடைய பெளத்த தருமம் நிலைபெற்றிருந்த அந்த ஆயிரம் ஆண்டுகளிலும் இந்நாடு சீரும் செழிப்புமுள்ள மாபெரும் வல்லரசாகத் திகழ்ந்து வந்தது. அலெக்ஸாந்தர் ஒருவரைத் தவிர, பின்னால் எந்த அந்நியரும் இந்தியா மீது படையெடுக்கத் துணியவில்லை. புத்தருக்குப்பின்பு இரண்டு நூற்றாண்டுகள் கழியுமுன்பே, சந்திரகுப்தர் இந்தியாவின் பெரும் பகுதியை ஒன்று சேர்த்து, உலகமே அதிசயிக்கத் தக்க வல்லமையுள்ள ஏகாதிபத்தியத்தை நிறுவித் தாமே அதன் சக்கரவர்த்தியாக விளங்கினார். அவருக்குப் பின்னால் அருளறம் பூண்ட அசோக சக்கரவர்த்தியின் ஆட்சியில் ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியாவுக்கு அளவற்ற செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. யவனர்களும் ரோமாபுரி மன்னர்களும் இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்பும் அரசியல் தொடர்பும் கொண்டிருந்தனர். இந்தியச் சக்கரவர்த்திகளின் செல்வாக்கையும், செழிப்பையும், ஆற்றலையும், சேனைகளின் வல்லமையையும், அரசியல் முறைகளையும் பார்த்தறிந்தே ரோமாபுரி பின்னால் தன் பெரிய ஏகாதிபத்தியத்தை அமைத்துக்கொள்ள முடிந்தது. இந்திய நாட்டைப்போலவே, புத்த ஞாயிற்றின் ஒளி ஆசிய கண்டத்தின் பல நாடுகளிலும் இருளகற்றி, மக்களின் மனத்திலுள்ள ஊற்றுக்கண்களைத் திறந்து வைத்து, எங்கணும் ஒரு புது வாழ்வை ஆரம்பித்து வைத்தது. பத்து நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்த அறக்கதிரின் உதவியால் மக்கள் அமைதியான இனிய வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். எங்கும் கல்வியும் கலைகளும் தழைத்தன. ஆங்காங்கேயுள்ள பழங்காலச் சின்னங்கள் இவைகளுக்குச் சான்று பகரும். இந்துகுஷ் மலைக்கு அப்பால் ஆப்கானிஸ்தானத்தில் பாமியன் என்ற இடத்தில் குன்றுகளினுள்ளே குகைச்சுவர்களில் தீட்டப் பெற்றுள்ள பன்னிற ஒவியங்கள் அஜந்தா மாதிரியைப் பின்பற்றியவை. அங்கே 110-அடி உயரமும், 160-அடி உயரமும் கொண்ட கம்பீரமான தோற்றமுள்ள இரண்டு புத்தர் சிலைகளும் இருக்கின்றன. நேபாளத்திலும், திபேத்திலும் வெண்கலத்தால் புத்தர் சிலைகளை வார்க்கும் கலை மிக்க வளம் பெற்றிருந்தது. ப. ராமஸ்வாமி ம 31