பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்

அடைய முடிகிறது. தாம் உணர்ந்ததை, தாம் உணர்ந்த வாறே பிறரும் உணரும் வண்ணம் வெளிப்படுத்துவது உண்மையான கவிஞர்களின் இயல்பு. பாவேந்தர் இதில் பெருவெற்றி பெறுகின்றார். அவர் உண்மையான கவிஞர், உணர்ச்சிக் கவிஞர். பெருமிதத்தைப் பாடிய கவிஞர் அவலத்தையும் பாடியுள்ளார். காதலர் பிரிவால் ஏற்படும் அவலம் அவரது கவிதைகளில் வடித்துரைக்கப்படுகின்றது. மனித உணர்வுகளுள் துன்பத்தால் ஏற்படும் அவல உணர்வு தலையாய ஒன்று. நாடு, மொழி, இனம், மதம் என்றிவற்றைக் கடந்து உலக மக்கள் அனைவரையும் இணைக்கும் உணர்வாக அவல உணர்வு திகழ்கின்ற தெனலாம். தமிழிலக்கியப் பரப்பில் அவலச்சுவை நிரம்பிய கவிதைகள் பல உள்ளன.

இளையோார் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே11

என்பது புறநானூற்றுப் பாடல்.ஒல்லையூர் நாட்டைச் சேர்ந்த பெருஞ்சாத்தன் என்னும் பெருமகன் இறந்த பின்னர் அவன் பிரிவிற்குக் கலங்கிய குடவாயிற்கீரத்தனார் என்ற புலவர் பாடிய இப்பாடலில் அவல உணர்வு தலை தூக்கி நிற்கக் காணலாம்.சாத்தன் இறந்ததால் அவ்வூரினர் அனைவரும் துயர உணர்வில் சிக்கினர்;துயர மிகுதியால் ஒருவரும் முல்லை மலரைச் சூடவில்லை;மகிழ்ச்சியை அளிக்கும் முல்லை மலரைச் சூடும் தருணம் அப்போது இல்லையென்பதால் யாரும் அதனைப் பறிக்கவே யில்லை.யாருக்கும் பயன்படாத நிலையில் அம்மலர் இருப்பதைக் கண்ட கவிஞர் அதனை நோக்கி நீ பூத்ததாற்