பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாடும்படி வேண்டினார். அந்த இளைஞர் ஒரு புலவர். புலவர் தேர்வில் மாநில முதன்மை பெற்றுத் தமிழறிவால் தம் புகழ் நிறுவிக் கொண்டவர். கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் உணர்ச்சிக்கு உயிரூட்டிக் கவிதை பாடக் கூடியவர். பாரதியார் பாடல்களில் நெஞ்சைப் பறி கொடுத்தவர். அவற்றை இசையோடு பாட வல்லவர். ஆனால் பாரதியாரைப் பார்த்ததில்லை. அவர் திருமண வீட்டிற்கு வந்திருப்பதும் இளம் புலவர் அறியார். கேட்டவுடன் இன்பம் சேர்க்க இளைஞர் பாடினார். அவர் தேமதுரத் தமிழில் இசைத்தவை பாரதியாரின் பாடல்கள். அந்த இசையமுதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் கிறுகிறுத்துப் போனார்கள். மகாகவியும் பண்ணாக வடிவெடுத்த தமது பாட்டால் மகிழ்ந்தார். அதை விடவும் பாட்டே தாமாகி, பாடும் பொருளாகி, உணர்வின் வெளிப் பாடாகிப் பாடிய இளைஞரைக் கண்டு வியந்தார். இசை விருந்து முடிந்தவுடன் பாரதியாருக்கு அந்த இளம் புலவரைக் கனக சுப்புரத்தினம் என்று அறிமுகப் படுத்தினார்கள். அங்கு இரண்டு கவி உள்ளங்கள் கலந்தன. புதிய உறவு-குரு-சீடர் என்ற தொடர்பு தொடங்கியது. கனக சுப்புரத்தினம், பாரதியார் பாடு' என்று கூறிட, பலர் வியந்து போற்றப் பின்வரும் பாடலைப் பாடினார்: எங்கெங்குக் காணினும் சக்தியடா-தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா-அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம்-அந்தத் தாயின் கைப் பந்தென ஓடுமடா-ஒரு கங்குலில் ஏழு முகிலினமும்-வந்து கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ?-எனில் மங்கை நகைத்த ஒலியெனலாம்-அவள் மந்த நகையங்கு மின்னுதடா.