பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III பாரதிதாசன் பாடல்களில் இயக்கம் இயக்கம் (Movement) என்பது சில கோட்பாடுகளை வரையறுத்துக் கொண்டு அதனை மக்களிடம் பரப்புவது. இசுலாமிய இயக்கம், கிருத்துவ இயக்கம் போன்றவை சமய அடிப்படையில் எழுந்த இயக்கங்களாகும். திராவிடர் கழகமும் ஓர் இயக்கமாகவே இயங்கி வருகின்றது. இதனைப் போலவே புலவர்கள் சில கொள்கைகளை வரையறுத்துக் கொண்டு அதனைத் தம் கவிதையின் மூலமாக மக்களிடம் பரப்புவர். இஃது இலக்கிய இயக்கம் (Literary movement) எனப்படும். இவ்வியக்கத்தின் பாடுபொருளாகச் சமயம், மானுடம், சீர்திருத்தம், மொழி போன்றவைகள் இருக்கலாம். பிறவும் ஏற்றுக் கொள்ளப்படும். புலவர்கள் ஏதேனும் ஒன்றையே இயக்கத்திற்குப் பாடுபொருளாக ஏற்றுக் கொள்வதுண்டு. ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பல கொள்கைகளைத் தம் இயக்கத்திற்குப் பாடுபொருளாகக் கொள்வதுமுண்டு. பாவேந்தர் பாரதிதாசனாரின் இலக்கிய இயக்கத்தைப் பாடுபொருளின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று தமிழ் இயக்கம்: ; பிறிதொன்று அதன்மான இயக்கம் (சுயமரியாதை இயக்கம்); மற்றது *சீர்திருத்த இயக்கம்'.