பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 55 குன்றம் சங்க காலத்தில் குறிஞ்சி' எனப் போற்றப்பட்ட மலை, மலைக்காட்சி என்றும் மாறா மகிழ்ச்சி நல்கும். தமிழ்க் கடவுள் முருகன் மலை நிலக் கடவுளாவார். குறிஞ்சிக் கிழவ" எனக் கோலக் குழந்தையை நக்கீரர் பெருமான் திருமுருகாற்றுப்படையில் பாராட்டுவார். குன்றம் சார்ந்தே முகில்கள் மழை பொழிகின்றன. அழகு உறையும் இடங்களில் ஒன்று குன்றம். தங்கத்தை உருக்கி விட்ட வானோடை தன்னி லேஓர் செழுங்கதிர் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை செங்குத்தாய் உயர்ந்த குன்றின் மரகதத் திருமேனிக்கு மங்காத பவழம் போர்த்து வைத்தது வையங் காண! -அழகின் சிரிப்பு, குன்றம், ப. 18. என்று மாலைநேரக் குன்றத்தை விளக்குகிறார். தங்கத்தை உருக்கிவிட்டாலெனத் துலங்கும் வானத்து ஒடையில் செங்கதிர் மூழ்கும் நேரம் மாலைக் காலமாகும். மூழ்கும் இடம் குன்றமாகும். பச்சைமலையில் பவழம் போர்த்தது போல மாலைக்கதிர் குன்றத்தில் மறைகிறது. அருவிகள் வயிரமாலையாகவும், அடர்ந்த கொடிகள் பச்சைப்பட்டுத் துணிகளாகவும், குருவிகள் தங்கக் கட்டி களாகவும், குளிர்ந்த மலர்கள் மாணிக்கக் கற்களின் குவியலாகவும் தோற்றுகின்றன. எருதின்மேற் பாயும் வேங்கை போல், நிலவுமேல் எழுந்த மின்னல் போலச் சருகுகள் மேலெல்லாம் ஒளிசேர் தங்கத் தகடுகளாக விளங்குகின்றன.