பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 63 வானை மறைக்கும் ஒற்றைக்கால் பந்தலாகக் கவிஞர் ஆலினைக் காண்கிறார். இலைச்சந்தில் குரங்கின் வாலை எலியென்று பருந்திழுக்கும் -அழகின் சிரிப்பு, ஆல், ப. 39. பருந்து குரங்கின் வாலை எலியென்று நினைத்து இழுக்கும். இக்காட்சி நளிை நகை பயப்பதாகும். ஆலங்கிளையிற் பாம்பு தொங்க, அதனை விழுதென்று எண்ணிக் குரங்கு தொட்டுவிட்டு, விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்ததைப் போல் கிளைதொறும் குதித்துத் தாவிக் கீழேயுள்ள விழுதுகளையெல்லாம் ஒளி யுடைய பாம்புகளென்று கருதி, உச்சிக் கிளைக்குச் சென்று, தன் வாலையே பாம்போவென அச்சத்துடன் கண்டு மருளும். நகைச்சுவை கொப்பளிக்கும் அக்காட்சியினை வடித்து நிற்கும் பாடல் வருமாறு: கிளையினிற் பாம்பு தொங்க விழுதென்று, குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்த தைப்போல் கிளைதொறும் குதித்துத் தாவிக் கீழுள்ள விழுதையெல்லாம் ஒளிப் பாம்பாய் எண்ணி எண்ணி உச்சிபோய்த் தன்வால் பார்க்கும் - - அழகின் சிரிப்பு, ஆல், ப. 40. அடுத்து, இயற்கையில் இலங்கும் ஒரு காட்சி கொண்டு மாந்தர் கற்க வேண்டிய நன்றி யெனும் பாடத்தைக் கற்பிக்கின்றார். ஆலமரத்தினைக் காற்று மோதும்; நான் அசைவேனோ எனச் சிரித்துத் தன் அழகுக் கிளைகள் எல்லாம் குலுங்க அடிமரக் குன்று அசையாமல் நிற்கும். இதுகாறும்