கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் 123 'திரு. ஈ.வே.ராமசாமி, கடுங்காவல் தண்டனை ஏற்று சிறைக் கோட்டம் நண்ணினர். வெள்ளிய தாடி அசைய, மெலிந்த தோல் திரங்க, இரங்கிய கண்கள் ஒளிர, பரந்த முகம் மலர, கனிந்த முதுமை ஒழுக ஒழுகத் தாங்கிய தடியுடன் அவர் சிறை புகுந்த காட்சி, அவர்தம் பகைவர், நொதுமலர், நண்பர், எல்லார் உள்ளத்தையும் குழையச் செய்திருக்குமென்பதில் அய்யமில்லை. 'முதுமைப் பருவம்! காவல்! கடுங்காவல்! என்னே! இத் நிலையை உன்ன உன்ன உள்ளம் உருகுகிறது. திரு. ஈ. வே. ராவுடன் மிக நெருங்கிப் பழகிய சிலர் மந்திரிப் பதவியில் வீற்றிருக்கின்றனர். அவர்தம் மனதும் கசிந்தேயிருக்கும். வயதின் முதிர்ச்சி எவரையும் அலமரச் செய்யும். நண்பர் ஈ.வே.ராவுக்குச் சிறைவாசம் பழையது; மிகப் பழையது; புதியதன்று. முன்னே, அவர் ஒத்துழையாமையில் ஈடுபட்டும் தீண்டாமையை முன்னிட்டும் சமதர்மத்தைக் குறிக் கொண்டும் பலமுறை சென்றுள்ளனர். இம் முறை அவர் இந்தி எதிர்ப்புக் காரணமாகச் சிறை நுழைந்திருக்கின்றனர். சிறைக் கோட்டம் அவருக்கு ஒருவிதத் தவக் கோட்டம் ஆயதுபோலும். சிறைப் பறவையாகிய ராமசாமி வரலாற்றை விரித்துக் கூற வேண்டுவதில்லை. 'அவர்தம் வரலாற்றில் அறியக் கிடக்கும் நுட்பங்கள் பல உண்டு. அவைகளில் சிறப்பாகக் குறிக்கத்தக்கன, இடையறாச் சேவை, சமத்துவ நோக்கம், சுதந்திர உணர்ச்சி, நட்புரிமை, தாட்சண்ய மின்மை, உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசாமை, அஞ்சாமை, ஊக்கம், சோர்வின்மை, சலிப்பின்மை, எடுத்த வினையை முடிக்கும் திறன், கரவு-சூழ்ச்சியின்மை முதலியன. இவைகள் அவர்தம் வாழ்வாக அரும்பி, மலர்ந்து, காய்ந்து, கனிந்து நிற்கின்றன. இந் நீர்மைகள் அவரை அடிக்கடி சிறைபுகச் செய்கின்றனபோலும். முதுமைப் பருவத்திலும் அவர் தலை சாய்த்துப் படுக்கையில் கிடந்து காலங் கழித்தாரில்லை. அவர் தமிழ் நாட்டின் நாலா பக்கமும் சுழன்று சுழன்று இரவு பகல் ஓயாது கர்ச்சனை செய்து வந்தார். ஓய்வு என்பதை அறியாது வீர கர்ச்சனை புரிந்து வந்த கிழச் சிங்கம் இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறது. சிறையில் தலை நிமிர்ந்து கிடக்கிறது.' கிழச் சிங்கமாம் பெரியார் ஈ. வே. ராமசாமியை தமிழர்கள் ஏற்கனவே தம் இதயங்களில் சிறைப்படுத்தி வைத்துப் பல் லாண்டுகள் ஆயின. இதை அறியாத ஆட்சி அவரைச் சிறைக்குள் தள்ளிப் பார்த்தது. அதை அறிய, அத் திங்களில் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. சென்னையில், 1938ஆம் ஆண்டு டிசம்பர் 29,30,31ஆம்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/135
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை