பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழி

கம்பராமாயணம் : ஆசிரியர்: பேராசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன், பதிப்பகம் : அணியகம், 5, செல்லம்மாள் தெரு, செனாய் நகர், சென்னை - 30. பக்கம் 320, விலை ரூ. 90/- மூன்றாம் பதிப்பு - 2000.

‘கம்பராமாயணம்’ என்றதொரு உரைநடை நூல் டாக்டர் ரா.சீனிவாசன் அவர்களால் எழுதப்பட்டு மூன்றாம் பதிப்பாகத் தற்போது வெளிவந்துள்ளது. உலக இலக்கியங்களில் ஒன்றெனக் கருதற்குரிய கம்பராமாயணம் தமிழ் மக்களால் பெரிதும் விரும்பப்படும் பேரிலக்கியமாகும். கம்பன் பாடிய இராமா யணத்தைப் படித்துச் சுவைக்க இயலாதவர்களும், கம்பனைச் சுவைத்தவர்களும் படித்து மகிழும் நடையில், உரைநடையாக இந்நூல் ஆசிரியர் படைத்துத் தந்துள்ளார்.

கம்பராமாயணக் கதையைக் கதைத்தொடர்பு சிறிதும் சிதையாமல், எளிய நடையில் எடுத்துரைக்கும் திறமுடையதாக இந்நூல் விளங்குகின்றது. பேராசிரியர் ரா.சீனிவாசன் அவர்கள் தமக்கே உரிய உரைநடை ஆற்றலால் சொல்லாட்சித் திறமும், பழகு தமிழ்ச் சொற்களும், சுவையும், செறிவும் ஒருங்கே திகழ இந்நூலைத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தமது கொடையாகத் தந்துள்ளார். நூலின் இடையில் இடம்பெறும் நாடகப் பாங்கு நூலிற்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றது. கம்பனின் படைப்பைச் சிலர் வெறும் பொழிப் புரையாக எழுதியுள்ள நிலையில், புத்தாக்கமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கம்பனின்காவியப் போக்கும் இந்நூலில் ஆங்காங்கே இடம் பெற்றிருப்பதால் கம்பனை மீண்டும் படிப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் இந்நூல் தருகின்றது.

பேராசிரியர் டாக்டர் ரா.சீனிவாசன் அவர்களின் இம் முயற்சி புத்திலக்கியப் படைப்பாக, மீட்டுருவாக்கமாக நினைக்கச் செய்கின்றது. செய்யுள் வடிவ நூல்களைப் படிக்கும் பழக்கம் குறைந்து வரும் இக்கால கட்டத்தில், இதைப் போன்ற நூல்கள் தமிழ் இலக்கிய உணர்வு, பெருமை நீடுவாழத் துணை செய்யும். டாக்டர் ரா.சீ. அவர்களின் இலக்கியப் பணி தொடர வாழ்த்துகள்; வாழ்க அவர்தம் தொண்டு.

முனைவர் ப.ச. ஏசுதாசன்