பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

புறநானூறு - மூலமும் உரையும்



65. நாணமும் பாசமும்!

பாடியவர்: கழாஅத் தலையார். பாடப்பட்டோன்: சேரமான் நெடுஞ்சேரலாதன், இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது பாடியது. திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. சிறப்பு: புறப்புண்பட்டோர் நாணி வடக்கிருந்து உயிர்விடும் மரபு.

(மன்னன் வடக்கிருந்தனன்; நாள் போற் கழியல ஞாயிற்றுப் பகலே என வருந்திக் கூறுதல் அவலம் மிக்கது ஆகும்)

மண் முழா மறப்பப், பண் யாழ் மறப்ப, இருங்கண் குழிசி கவிழ்ந்துஇழுது பறப்பச் சுரும்புஆர் தேறல் சுற்றம் மறப்ப, உழவர் ஒதை மறப்ப, விழவும் அகலுள் ஆங்கண் சீறுர் மறப்ப, 5 உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து, இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் புன்கண் மாலை மலைமறைந் தாங்குத், தன்போல் வேந்தன் முன்புகுறித்து எறிந்த புறப்புண் நாணி, மறத்தகை மன்னன் 10

வாள் வடக்கு இருந்தனன், ஈங்கு, நாள்போற் கழியல, ஞாயிற்றுப் பகலே!

பெளர்ணமி நாளிலே மாலை வேளை, கீழ்ப்பால் நிலவும் எழுகிறது; மேற்றிசையிலே எதிர்த்து இருந்த கதிரவன், முடிவிலே அதற்கு எதிர் நிற்கவும் நாணி, மலைவாயிலிற் சென்று ஒளிந்தனன். அதேபோல், நின்போன்ற வேந்தனுடன் போரிட்டபோது எதிர்பாராது புறப்புண்பட்ட நீ நாணினாய், வாளுடன் வடக்கிருந்தாய். என்னே இக் கொடுமை! முழவுகள் ஒலியடங்கின; யாழ் இசை துறந்தன; தயிர்ப் பானைகள் வெறும் பானைகளாகக் கிடந்தன; சுற்றத்தினர் மதுவை மறந்தனர்; உழவர் ஒதையும் அடங்கின; ஊர் விழாவும் ஒழிந்தன! நின்னையும் பகலையும் ஒருங்குக் கண்டு மகிழ்ந்து இன்புற்றோமே! நீயே இல்லையானால், இனிப் பகல்தான் எமக்கு எவ்வாறு இன்பமுடன் கழியுமோ? (புலவர் கொண்ட நட்புப் பாசத்தினைக் காண்க)

சொற்பொருள்: 1. மண் - மார்ச்சனை. 2. குழிசி - பானை, இழுது - நெய் 5 அகலுள் ஆங்கண் - அகன்ற தெருவினையுடைய. 10.புறப்புண்-முகத்தும், மார்பிடத்தும் ஒழிந்து ஏனையவிடத்துற்ற புண.