பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

177


சொற்பொருள்: 1. நீண்டு ஒலி அழுவம் - பெரியதாய் ஒலிக்கின்ற பரப்பினையுடைய கடல். 4. என்றுழ்க் காலை - கோடைக் காலத்து. 11. அன்பு இன்று வன்கலை தெவிட்டும். அருஞ்சுரமாயிருக்கத் தம்முயிர் மேல் அன்பின்றி வலிய கலைகிடந்து அசையிடும். 13. கண்பொறிபோகிய - கண்ணொளி மழுங்கிய.14 என் பெருந்துன்புறுவி-பொறுத்தற்கரியதுன்பமுறும் எனது பெரிய வறுமையுறுவோள்; மனைவி. 29. நாள்முரசு இரங்கும் நாட்காலையே முரசு முழங்கும்.

162. இரவலர் அளித்த பரிசில்

பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோன்: இளவெளிமான். திணை: பாடாண். துறை: பரிசில் விடை சிறப்பு: புலவர் பெருமிதம்.

(வெளிமானிடம் சென்றார் புலவர். அவனோ சாவின் எல்லையிலிருந்தான். தன் பின்னோனான இளவெளிமானைக் காட்டிக் கொடு என்றான். அவன் சிறிது கொடுக்க, அதனைக் கொள்ளாது குமணனிடம் சென்றார் புலவர். அவன் தந்த பகட்டைக் கொணர்ந்து வெளிமானூர்க் காவன்மரத்திற் கட்டிவிட்டுப்பாடிய செய்யுள் இது.அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கத்துள் ஏற்றல் துறைக்கு இளம்பூரணர் காட்டுவர். (புறத். சூ.36)

இரவலர் புரவலை நீயும் அல்லை! புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்; இரவலர் உண்மையும் காண், இனி, இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண், இனி, நின்ஊர்க் கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த 5

நெடுநல் யானை எம் பரிசில்; கடுமான் தோன்றல்! செல்வல் யானே.

தலைவனே! இரவலர்க்கு உதவும் புரவலனும் நீயல்லன்; இரப்போர்க்கு உதவுபவர் இல்லாமலும் போய்விடவில்லை. இனி, இரவலரும் புரவலரும் என்றும் உண்டென உணர்வாயாக! நின் ஊரின் காவல்மரம் வருந்த யான் கொண்டுவந்து கட்டிய உயர்ந்த யானை, நினக்கு என்னுடைய பரிசில். அதனைப் பெற்றுக் கொள்வாயாக யான் போகின்றேன்.

சொற்பொருள்: 5. கடிமரம் வருந்தத் தந்து - காவலையுடைய மரம் வருந்தக் கொண்டுவந்து; பகைவருடைய காவல் மரத்தை அல்லது காவற்சோலையை வெட்டுதலும், வெட்டாமல் அம் மரத்தில் தம்முடைய யானையைக் கட்டுதலும், வென்ற அரசர்க்கு இயல்பு. -