பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

புறநானூறு - மூலமும் உரையும்


மகளிர்பால் மென்மையாகவும் வலியோர்பால் வலிமையோடும் நடப்பவன்; அந்தணர்க்கோர் புகலிடமாக விளங்கியவன்; அத் தகுதி உடையவனின் இனிய உயிரையும் சற்றும் கருதாது கூற்றம் கவர்ந்து விட்டதே! வாய்ம்மையுடைய புலவர்களே! எல்லோரும் சுற்றமுடன் சேர்ந்து அக் கூற்றினை இகழ்வோம் வாரீர் உலகம் துன்புறுமாறு, கேடற்ற புகழ் நிறைய, நடுகல்லாயினான் நம்மைப் பாதுகாப்பவன். அக் கூற்றினை நாமும் ஏசுவோம் வாரீர்!

சொற்பொருள்: 3. ஆய்கோலன் - நீதிநூற்குத்தக ஆராய்ந்து நடத்திய செங்கோலை யுடையவன். சாயல் - மென்மையுடையவன். மைந்தர்க்கு - வலியையுடை போரிடத்து மைந்து - மிக்க வலிமை, 6. உயர்ந்தோர் - அந்தணர். 8. நினையா - அவ்வாறு கருதாத, 9. பைதல் ஒக்கல் - பையாப் புற்ற நமது சுற்றத்தை.12. வாய்மொழி - மெய்யுரை.

222. என் இடம் யாது?

பாடியவர்: பொத்தியார். பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன். திணை: பொதுவியல் துறை: கையறு நிலை குறிப்பு:தன் மகன் பிறந்தபின், சோழனது நடுகல் நின்ற இடத்திற்குச் சென்று, தாமும் உயிர்விடத் துணிந்த பொத்தியார், 'எனக்கும் இடம் தா" எனக் கேட்டுப் பாடியது இச் செய்யுள்.

'அழல்அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி, நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா' என, என்இவண் ஒழித்த அன்பி லாள! எண்ணாது இருக்குவை அல்லை; 5 என்னிடம் யாது? மற்று, இசைவெய் யோயே?

“நின் காதல் மனைவி புகழ் அமைந்த பிள்ளையைப் பெற்ற பின் வா!' எனச் சொல்லி, என்னை முன்னர்ப் போக்கியவனே! அன்று அன்பிலாளன் போலவே நீ கூறினாலும், நினக்கும் எனக்கும் உள்ள நட்பை எண்ணாது இருக்க மாட்டாய் மகனும் பிறந்தான்; யானும் வந்தேன். புகழை விரும்புவோனே! என் இடம் யாது? அதனைச் சொல்வாயாக!

சொற்பொருள்: 1. அழல் வயங்கு அவிர் இழை எனக் கொண்டு கூட்டி, தீயால் விளங்கிய ஒளியையுடைய ஆபரணம் எனப் பொருள் கொள்க.4 அன்பு இல் ஆள உறவு இல்லாதவனே. 5. எண்ணாது இருக்குவை அல்லை - நின்னோடு என்னிடை நட்பைக் கருதாது இருப்பை யல்லை. 6. என்னிடம் - எனக்குக் குறித்த இடம்.