பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

273


நொச்சியே! மலர் நிறைந்த பலவகை மரங்களினும் நீயே நன்மரமாக விரும்பும் தகுதியினை உடையை தொடியணிந்த மகளிரின் இடையிலும் விளங்குகின்றாய்; கோட்டைக் காவல் மேற்கொண்டு, நகரைக் கொள்ளக் கருதிவரும் பகைப்புல வீரரை அழிப்பவனாக, பகைவர்க்கு வீழாது நகரைக் காக்கும் மறவனின் தலையிலே கண்ணியாகவும் விளங்குகின்றாய்; அதனால்தான், நீ 'காதல் நன்மர மாயினை போலும்!

273. கூடல் பெருமரம்!

பாடியவர்: எருமை வெளியனார். திணை: தும்பை. துறை: குதிரை மறம்.

(தும்பைத் திணைக் குதிரைநிலைத் துறைக்கு நச்சினார்க் கினியர் எடுத்துக் காட்டுவர் (தொல், புறத். சூ.17). குதிரை வீரனின் மறமாண்பை வியந்து போற்றலாற் குதிரை மறம் ஆயிற்று. இருதிறத்துப் படைகளுக்கும் இடையே நின்று அவன் போரிட்ட திறத்தை, மிகவும் சுவையோடு செய்யுள் சொல்வது காண்க)

மாவாராதே; மாவாராதே;

எல்லார் மாவும் வந்தன; எம்இல்,

புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த

செல்வன் ஊரும் மாவாராதே -

இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல் 5

விலங்கிடு பெருமரம் போல, உலந்தன்று கொல்; அவன் மலைந்த மாவே?

குதிரை வாராதிருக்கின்றதே! குதிரை வாராதிருக்கின்றதே! எல்லார் குதிரைகளும் வந்தனவே எமக்கு ஒரு புதல்வனைத் தந்த செல்வன், எம் கொழுநன், அவன் ஊர்ந்து வரும் குதிரை மட்டும் வரக் காணோமே! அவனைச் சுமந்து சென்ற குதிரை, இரண்டு பேராறுகள் கூடும் இடத்திலே சிக்கிவிட்ட பெருமரம்போல, இருபெரும்படைக்கும் இடைப்பட்டு அலைப்புண்டு வீழ்ந்து விட்டதோ? (கணவனை வரக்காணாது கலுழ்வாள், அவன் குதிரை மட்டும் வரவில்லையே என ஏங்கும் ஏக்கம் இது)

274. நீலக் கச்சை

பாடியவர்: உலோச்சனார் திணை: தும்பை. துறை: எருமை மறம். - .

(தும்பைத் திணைத் துறைகளுள், 'படையறுத்துப் பாழி கொள்ளும் ஏமம் என்பதற்கு இளம்பூரணரும், நச்சினார்க் கினியரும் எடுத்துக் காட்டுவர். முதுகிட்டதன் சேனையைக் கண்டு கொதித்தெழுந்து, களத்தைத் தனதாகக் கொண்டு, பகைப் படையைத் தாங்கி நின்று, அவர் பீடழித்து வெற்றி கொண்டும்,