பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

429


நக்கீரர் 56, 189, 395

இவர் கடைச் சங்கத் தலைவராக விளங்கியவர். மதுரைக் கணக்காயனார் என்பவரின் மகனார். பெரும் புலமையும், உலையா உள்ளமும், தெளிந்த அறிவுநலமும் ஒருங்கே அமைந்தவர். அகநானூற்றுள் 17 செய்யுட்களும், குறுந்தொகையுள் 8 செய்யுட்களும், நற்றிணையுள் 7 செய்யுட்களும், பத்துப்பாட்டுள் முதலாவதாகிய திருமுருகாற்றுப் படையும், ஏழாவதாகிய நெடுநல் வாடையும் இவர் பாடியனவாக விளங்குவன. இறையனாரகப் பொருளுக்கு இவரியற்றிய உரை மிகத் திட்பம் வாய்ந்தது. இவர் நக்கீர தேவ நாயனாருக்குப் பலநூறு ஆண்டுகட்கு முற்பட்டவர்; பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனையும், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும், முருகப் பெருமானையும் பாடியவர். முருகப் பிரானைப் பற்றிய மிகப் பழைமையானதும், மிகச் சிறப்பானது மான திருமுருகாற்றுப் படையினைப் பாடிய சிறப்பினர் இவரே. இவர் செய்யுட்கள் செழுமையும் இனிமையும் நிரம்பின. இவர் வரலாறு மிகவும் விரிவானது. இச் செய்யுட்களுள் பாண்டியன் நன்மாறனைத் தேவர்களோடு ஒப்பிட்டுப் போற்றும் சிறப்பைக் காணலாம் (56). 'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' என்ற செறிவான அறவாக்கு இவருடையதே (189) பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைப் பாடிய செய்யுள் மிகவும் பொருட்சிறப்பு உடையதாகும். இவர் செய்யுட்களும் வரலாறும் தனியாக ஆராய்ந்து இன்புற வேண்டிய சிறப்புடையனவாகும்.

நரிவெரூஉத் தலையார் 5, 195

நீங்காத நோயுடையரான இவர், சேரமான் கருவூறேறிய எள்வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைச் சென் றடைந்து, அவனால் நோயும் வறுமையும் அகல, அவனவைக்கண் வீற்றிருந்து சிறப்புற்றனர் என்பது வரலாறு ஆகும். நரிவெரு உத்தலை என்பது இவரது தலையின் தோற்றத்தைக் குறித்தது எனவும், ஊரைக் குறித்தது எனவும் இருவகையாக உரைப்பர். குறுந்தொகையின் 5, 236 ஆம் செய்யுட்களும் இவர் பெயரானே வழங்கும். உறுதிப் பொருளைச் சேரனுக்கு உரைக்கும் செய்யுள் மிகவும் பொருட் செறிவு கொண்டதாகும். காவல் குழவி கொள்பவரின் ஒம்புமதி என்று உரைக்கின்றார் இவர். அரசனுக்கு எதிராகச் சதி செய்தார்க்கு அறிவுறுத்துவாராக, 'நல்லது செய்தல் ஆற்றிராயினும், அல்லது செய்தல் ஒம்புமின் என்று சொல்வது, அனைவரும் கொண்டு போற்றுதற்குரிய ஒழுக்கம் ஆகும்.