பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434

புறநானூறு - மூலமும் உரையும்



பாரி மகளிர் 112

பாரி வள்ளலின் மகளிர் இவர். தம் தந்தையது பிரிவாற் கலங்கி இவர் சொல்லியது இச் செய்யுள். ஐந்து அடிகளே யானாலும், அவற்றுள் விளங்கும் சோகம் அனைவரது உள்ளங்களையும் கசியச் செய்வதாகும். ஒளவையார் இவரை மலையமானின் மக்கட்கு மணஞ்செய்து வைத்தனர் என்று தமிழ் நாவலர் சரிதையாற் காணலாம். .

பாலை பாடிய பெருங்கடுங்கோ 282

இவர் சேரருள் கடுங்கோ மரபினைச் சார்ந்தவர். பாலை பாடுவதில் வல்லவர். இவரே சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை என்பாரும் உளர். அகநானூற்றுள் 12 செய்யுட்களும், கலித்தொகையிற் பாலைக்கலி பற்றிய செய்யுட்கள் 30 உம், குறுந்தொகையுள் 10 செய்யுட்களும், நற்றிணையுள் 10 செய்யுட்களும் இவர் பெயரான் வழங்கும். களத்திற் பட்டுவீழ்ந்த ஒரு மறமேம்பாட்டாளனை சேண் விளங்கும் நல்லிசை நிறீஇ, நாநவில் புலவர் வாயுளானே என வியந்து கூறியவர் இவராவர்.

பிசிராந்தையார் 97, 184, 191, 212

இவற்றுடன் அகநானூற்று 308 ஆம் செய்யுளும், நற்றிணையின் 91 ஆம் செய்யுளும் இவர் பெயரான் வழங்கும். பாண்டி நாட்டுப் பிசிர் என்னும் ஊரினர் இவர், கோப் பெருஞ் சோழனின் உயிர்த் தோழர். அவன் வடக்கிருந்து உயிர்துறக்க முற்பட்டதறிந்து, தாமும் அவனுடன் வடக்கிருந்து உயிர் விட்டவர். இவர் அறவொழுக்கத்தோடு வாழ்ந்தவர்; நரை திரை மூப்பைக் கடந்தவர்; மனைவி மக்களோடு சிறந்த முறையில் வாழ்ந்தவர். பாண்டியன் அறிவுடை நம்பியிடத்துச் சென்று அவனுக்கு அரசநெறி யாதெனக் கூறியவர் (புறம் 184) தமக்கு நரையில்லாதது எதனால் என்பதனை விளக்கும் இவரது செய்யுள் (191) மிகக் கருத்தாழம் கொண்டதாகும். இச் செய்யுள் அக் காலத்துப் பாண்டி நாட்டின் சிறந்த நிலையையும் காட்டுவதாகும். கோப்பெருஞ் சோழனைப் பற்றிய செய்யுட்கள், இவரது நட்புள்ளச் சால்பினை நன்கு எடுத்துக் காட்டுவன.

பிரமனார் 357

இவர் பாடிய இச்செய்யுளும் இடையிடைச்சிதைந்துள்ளது. இவர் நிலையாமையை நன்கு உணர்ந்து, வாழ்க்கையை வெறுத்துத் துறவற நெறியில் நின்றவர். பிரமத்தை (இறைவனை) உணர்ந்தவர் என்னும் சிறப்பால் இப் பெயரைப் பெற்றவர்.