பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

451


அந்துவஞ் சாத்தன் - 71

இவன் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனது நண்பர்களுள் ஒருவன்; அந்துவன் மகனாகிய சாத்தன் என்று அறியலாம். 'உரைசால் அந்துவஞ் சாத்தன்' என்று கூறும் பூதப் பாண்டியனது வாக்கு இவனது புகழார்ந்த பெருநிலையைக் காட்டும்.

அந்துவன் கீரன் - 359 .

அந்துவனின் மகனாகிய கீரன் என்பான் இவன்; இந்த அந்துவன் யாவன் எனத் தெரியவில்லை. பூதப் பாண்டியனால் போற்றப்பெற்ற அந்துவஞ் சாத்தனின் சகோதரனாக இவனைக் கொள்ளலாம் என்பர். காவட்டனாரின் இச் செய்யுள் இவனைப் பிறருக்கு உதவி இசையோடு விளங்குமாறு அறிவுறுத்துகின்றது. 'களிறும் தேரும் பரிசிலர்க்குத் தருக என்பதிலிருந்து, இவன் ஒரு சிற்றரசனாக விளங்கியவன் என்பதும் அறியப்படும்.

அம்பர்கிழான் அருவந்தை - 385

'அம்பர்’ என்னும் ஊரினன் இவன்; வேளாண் குடியிற் பிறந்தவன். சோணாட்டைச் சார்ந்தவன். இவன் பெரிய நிலப்பரப்புக்கு உரியவனாகவும், தன்னை வந்து இரந்தாருக்கு வரையாது வழங்கிய புகழோனாகவும் திகழ்ந்தவன். இவனைப் பாடியவர் கல்லாடனார் ஆவர். ஆதலால், இவனையும் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் காலத்தவன் என்று கூறலாம். - - -

அவியன் 583

இவன் ஒரு குறுநிலத் தலைவனாக விளங்கியவன். 'கான் கெழு நாடன், கடுந்தேர் அவியன் என, இவனைக் குறிக்கின்றனர் மாறோக்கத்து நப்பசலையார் என்பவர். ஆகவே, காட்டுநாட்டைச் சார்ந்தவன் என்று கருதலாம். மாறோக்கம் கொற்கைப் பகுதியைச் சார்ந்த ஒரு பகுதி. இவனும் அப் பகுதியைச் சார்ந்தவன் என்பர் சிலர். அது பொருந்துமாறில்லை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனும், மலையமான் திருமுடிக்காரியும் இவன் காலத்தவராவர். இனிக் கள்ளில் என்னும் ஊருக்கு உரியவனான அவியன் ஒருவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியுள்ளனர். அது திருமுனைப்பாடி நாட்டுப் பகுதியைச் சார்ந்தது. அப் பகுதி ஊரினனே இவன் என்று கருதுதல் பொருந்தும். இவனைப் போன்றே இவன் மனைவியும் சிறந்த புகழுடன் திகழ்ந்தவள். 'கற்புடை மடந்தை தற்புறம் புல்ல, மெல் அணைக் கிடந்தோன்’ என்று இவனைப் போற்றுவதனால் அதனை அறியலாம்.