பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பப்ளிகேஷன்சாரும், நான்காம்பதிப்பைப் பாரதிபதிப்பகத்தினரும், ஐந்தாம் பதிப்பைக் கேசிகன் பதிப்பகத்தாரும் வெளியிட்டனர்.

ஐந்தாம் பதிப்பிற் பல புதிய செய்திகளைச் சேர்த்தேன். அதனால், ஏறக்குறைய 120 பக்கங்கட்குமேல் நூல் வளர்ந்துவிட்டது. புறநானூற்றுப் பாடல்களைப் பாடியோர், புறநானூற்றுப் பாடல்களுட் பாடப்பட்டோர் வரலாற்றுக் குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன. புறநானூற்றுச் செய்யுட்களின் திணைதுறைகளின் விளக்கங்களையும், அவை பயின்றுவரும் இடங்களையும், பின்னிணைப்பாகத் தந்துள்ளேன். இவை நூலைக் கற்பார்க்குப்பெரிதும் உதவுவன. ஆறாம் பதிப்பும் அப்படியே வெளிவந்தது. இப்போது ஏழாம் பதிப்பும் அப்படியே வெளிவருகிறது.

புறநானூறாகிய போற்றற்குரிய தமிழ்ச் செல்வத்தைக் காலப் பெருவெள்ளத்திற்கும், கறித்தொழிக்க முயன்ற கரையான் களுக்கும், இரையாகாதே பேணிக்காத்த பெரு மக்களுக்கும், தேடிப்பெற்றுச் செப்பனிட்டு அச்சேற்றித்தந்த தமிழ்வள்ளல் உ.வே. சாமிநாதய்யர் அவர்கட்கும், விரிவுரைவகுத்து வழங்கிய ஒளவை. சு.துரைசாமிப்பிள்ளை அவர்களுக்கும், எழுதியும் பேசியும் நாடெங்கணும் நாளெல்லாம் பரப்பிவரும் எண்ணற்ற தமிழ்ப்பெரியார்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அன்பர்களுக்கும் என் நன்றிக் கடன் மிகமிகப் பெரிதாகும்.

இவர்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கஞ் செலுத்தி, இந்தத் தெளிவுரை பதிப்பைத் தமிழ்கூறும் தகைமைசால் நல்லுலகிற்குப் படைக்கின்றேன். இதனை விரும்பி வரவேற்றுத் தாம் கற்றும் பிறர்க்கு எடுத்துரைத்தும், தமிழ் உலகம் தமிழ்நலத்தில் திளைத்து இன்பமும் தமிழ் வீறும் பெற்றுப் புகழார்ந்த பெருஞ்சிறப்பினை எய்துமாக! தமிழ் இளைஞரும் கன்னியரும் தமிழ் மனமும் தமிழ்ப்பண்பும் ஒருங்கே பெற்றாராகி உயர்வாராக! தமிழ் மணம், தமிழ் நலம், தரணி எங்கணும் படர்ந்து தழைத்து ஓங்குமாக! - -

தாள்விலை பிற் அச்சிடும் செலவுகள் மிகவும் மிகுதியாக வளர்ந்துவிட்டபோதிலும், தமிழ் நலமே கருதும் பாரி செல்லப்பனார் அவர்கள், இந்த ஏழாம் பதிப்பினை வெளியிட்டு உதவுகின்றனர். அவர்கள் பேரன்பிற்கும் நன்றியுடையேன்.

தமிழ் நலங் கருதும் அன்பர்கள் தடுக்கவியலாதே கூட்டுதற்கு நேர்ந்த விலையுயர்வைப் பாராட்டாமல் வழக்கம் போல் ஆதரவளித்து உதுவுவார்கள் என்றும் நம்புகின்றேன்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழார்வம்!

1958 * புலியூர்க் கேசிகன்