பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

131


கபிலருக்கு இந்தச் சோக சிந்தனைக்குப் பிறகு உறக்கமே வரவில்லை. அப்படியே முழு நிலாவையும், அதன்கீழ் தெரியும் பறம்பு மலையையும் பார்த்தவாறே குடிசை வாசலில் உட்கார்ந்து விட்டார். சற்றுமுன் அங்கவைக்கும் சங்கவைக்குமிடையே நடைபெற்ற சம்பாஷணை அவருடைய நினைவில் மிதந்தது. அவருடைய நினைவும் அந்தச் சோகத்தில் மிதந்து கொண்டிருந்தது.

“அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்.
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!” (புறநானூறு-12)

அற்றைத் திங்கள் = அந்தப் பெளர்ணமி, குன்று = பறம்புமலை, இற்றைத் திங்கள் = இந்தப் பெளர்ணமி, எறிமுரசு = அடிக்கத்தக்க முரசு, வேந்தர் = மூவேந்தர், எந்தை = பாரி.


30. இரண்டு பகைகள்

அதியமானுக்கு ஒரு புதல்வன் இருந்தான். வாலிபப் பருவத்தினனாகிய அப்புதல்வனுக்குப் பொகுட்டெழினி என்று பெயர். நல்ல வளர்ச்சியும் உடற்கட்டும் பார்த்தவர்ளை உடனே கவரும் அழகான தோற்றமும் இவனுக்குப் பொருந்தியிருந்தன.

அந்தத் தோற்றத்தை வெறும் அழகான தோற்றம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அப்படிச் சொன்னால் சொல்லி யவர்களுக்கே திருப்தி ஏற்படாது. கொஞ்சம் வருணிக்கலாமே என்றுதான் தோன்றும்.

பரந்து விரிந்த மார்பு நீண்ட பெரிய கைகள் உருண்டு திரண்டு பருத்த புயங்கள். எடுப்பான கழுத்து, அதன் மேல் கம்பீரமான முகத்தோற்றம். நீண்டு வடிந்த நாசி மலர்ந்த விழிகள்.