பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

173

எல்லாம் சில நாழிகைகளில் கண்களைக் கடந்து வெகுதுரத்துக் கப்பால் மங்கி மறைந்துவிட்டன. ஒரேருழவரின் கால்களை இறுக்கியிருந்த குடும்பக் கால் கட்டு அறுந்து விட்டது. அவர்தனியே நடந்து சென்று கொண்டிருந்தார். காட்டுவழியாகப் போகுமிடம் எது? என்ற குறிப்பே இல்லாமல் நடந்து போய்க் கொண்டிருந்தார். தளைகளை அறுத்துக்கொண்டு தனிவழியில் ஒடுகிறதாக மகிழவேண்டிய மனம் செய்யத் தகாததைச் செய்து விட்டு, போகத் தகாத வழியில் போய்க் கொண்டிருப்பதாகக் குத்திக் காட்டியது.

பொழுது பலபலவென்று விடிகின்ற நேரத்திற்கு ஒருகாட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தார் அவர் நடக்க நடக்க மனம் ஒருவிதமான பிரமையில் ஆழ்ந்தது. ஏதோ உடைமைகளை எல்லாம் பறிகொடுத்துவிட்டு எங்கோ, கண்காணாத இடத்துக்கு ஒடுவது போன்ற எண்ணம் இதயத்தை அழுத்தியது.

மேற்குப் பக்கம் அடர்த்தியான காடு. கிழக்குப் பக்கம் கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒரே உவர்மண் பூமி. அந்தக் களர்நிலச் சமவெளி பதனிடப்படாத தோலைப் பரப்பி வைத்த மாதிரி மேடும் பள்ளமுமாக உப்புப் பரிந்து தென்பட்டது. இவை இரண்டிற்கும் நடுவே உள்ள வழியில்தான் அவர்சென்று கொண்டிருந்தார்.

பசுமை தவழும் காடும், பாளம் பாளமாக வெடித்த வெள்ளரிப் பழம் போன்ற உவர் மண் பரப்பும் அருகருகே நேர்மாறான இரு துருவங்களைப்போல விளங்கின.

புலவர் ஒரேருழவர் அந்த வழியாக நடந்து கொண்டிருக்கும் போதே காட்டையும் களர்நிலத்தையும் தொடர்புபடுத்தும் நிகழ்ச்சியொன்று நடந்தது.

காட்டிலிருந்து ஒரு மான் குடல் தெறிக்க ஓடிவந்து களர் நிலத்தில் இறங்கி, மீண்டும் ஓடியது. அதன் பின்னாலேயே ஒரு வேடன் வில்லும் கையுமாக அதைத் துரத்திக் கொண்டே ஓடிவந்தான். அவனும் அதை விடுவதாக இல்லை. வில்லை வளைத்துக் கொண்டு களர்நிலத்தில் இறங்கிவிட்டான்.