பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

புறநானூற்றுச் சிறு கதைகள்

நண்ணார் நாண அண்ணாந்தேகி
ஆங்கினி தொழுகின் அல்லது ஓங்குபுகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நூம்மோரன்ன செம்மலும் உடைத்தே! (புற நானூறு - 47)

வள்ளியோர் = கொடுப்பவர், புள்ளின் = பறவையைப்போல, சுரம் பல = பல வழிகளை வல்லாங்கு = இயன்ற அளவு கூம்பாது = சேர்த்து வைக்காமல், அண்ணாந்து = பெருமிதங் கொண்டு, செம்மல் = சிறப்பு, படர்ந்து = சென்று, வடியா நா = முற்றாத நா.


12. எளிமையும் வலிமையும்

மாலை நேரம். குதிரை மலையின் நீலச் சிகரங்களுக்கு அப்பால் கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். தகடுர் வீதிகள் ஆரவாரமும் கோலாகலமும் நிறைந்து விளங்கிக்கொண்டிருந்தன. அந்த இனிய நேரத்தில் அதியமானும் ஒளவையாரும் புறநகரில் இருந்த பெரிய ஏரி ஒன்றின் கரை ஓரமாக உலாவிக் கொண்டிருந்தனர். தமிழ்த் தாயாகிய ஒளவையாரிடம் அரும் பெரும் பாடல்களையும் அறிவுரைகளையும் கேட்டுக் கொண்டே இயற்கை அழகு மிகுந்த இடங்களில் அவரோடு உலாவுவது அவனுக்கு எப்போதுமே மிகவும் விருப்பமான ஒரு காரியம்.

உலாவிக் கொண்டே வந்தவர்கள் ஏரியின் மிகப் பெரிய இறங்கு துறை ஒன்றின் அருகிலிருந்த மருதமரத்தின் அடியில் உட்கார்ந்தனர். அப்போது அந்தத் துறையில் அரண்மனையைச் சேர்ந்த பட்டத்து யானையைப் பாகர்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். ஊர்ச் சிறுவர்கள் யானையைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

தண்ணீருக்குள் ஒரு சிறிய கருங்கல் மலை கிடப்பதைப் போல கிடந்த யானையைக் காண்பதில் இளம் உள்ளங்களுக்கு ஒரு. தனி ஆர்வம்.