பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

கம்பன் கலை நிலை


யும், இந்நாள் இருக்கும் நிலைமையும் எண்ணி அறியின் எவர் உள்ளம்தான் உருகாது? உண்மை யுணர்வார் கண்ணீர் சொரிவார் ; உணரார் ஒன்றும் உணரா துறைவார்.

மனித சமூகத்திற்கு இரண்டு கண்களாக உள்ள கல்வியும் செல்வமும் அக்காலத்தில் இங்கு ஒளிமிகப்பெற்று உறுதி நலம் கனிந்து உயர்நிலையிலிருந்தன. இன்று அவை உள்ளொளி குன்றி வறிதே ஒங்கி யுள்ளன. படிப்போ உள்ளம் படியாது கள்ளம் படிந்துள்ளது; பொருளோ, அருளொடு மருவாது மருள்மிகுந்துள்ளது. முன்னது உள்ளது சிறிதானாலும் கொள்ளைச்செருக்கு, தற்புகழ்ச்சி, பிறரிகழ்ச்சி, குதர்க்கம், குறும்பு, இச்சகம் பேசல் முதலிய கொச்சைகள் பலவுடன் கூடிக் குலாவுகின்றது. பின்னது பேராசை, பெருமோசம், நயவஞ்சகம், பதவி மோகம், படுலோபம், கொடுமை, இளிவினை உயர்வென ஏமாந்து விழைதல் முதலிய பழிவழிகளில் படிந்து படுதருக்குடன் நிமிர்ந்து நிற்கின்றது.

ஒரு நாட்டுக்குக் கண்கள் என்று சொல்லப்படுகின்ற கல்வி செல்வங்களாகிய இரண்டும் இங்ஙனம் புரண்டு நின்றால் அந்த நாடு காட்சியற்ற குருடன்போல் மாட்சியழிந் தொழியாமல் வேறு என்ன செய்யும்? உயர்ந்த நிலையில் இருப்பதாகத் தோன்றுவதெல்லாம் விழிகண் குருடு போன்றதோர் வெறும் போலித் தோற்றமேயாம். “இளிவுக்கே ஏற்றம் தந்து இருங்களிப் பெய்துகின்றார்” என்றபடியே செய்து வந்தால் இங்கு உய்தியுண்டோ?

கண்போன்ற செல்வரும் கல்வியாளரும் இவ்வாறானால் அவை இரண்டும் சேரப்பெறாத மற்றவரைப்பற்றி நோவதால்? யாதுபயன்?

“‘கற்றவர்கள் அகந்தையினால் கலந்துமகிழ் பெரும்பேற்றைக்
            கருதாது அந்தோ ! -
முற்றிழந்தார்; மற்றவரோ முறைதெரியா தயல்நின்று
            மூடம் ஆனார்;
உற்றபெருஞ் செல்வர்களோ உளஞ்செருக்கி உதவாமல்
            உணர் வொழிந்தார்;
எற்றேநம் தமிழ்ப்புலமை இன்பமுறப் பெற்றிங்கே
            இலங்கு நாளே.”

என்று இரங்கு நாளாக இந்நாடு இந்நாள் இறங்கி உள்ளது.