பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

கம்பன் கலை நிலை


இவர்களிடம் எவரும் அறியமுடியாத ஒரு தெய்வீகத்தன்மை தனியே இனிதமைந்திருக்கிறது. இவர் நாவசையாமலே நாட்டை அசைத்துவிடுகின்றார். விற்பனத் திருவுடைய இவரது அற்புத ஆற்றல் அளவிடலரியது. எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா உயிர்களுக்கும் ஒர் இலகொளி ஞாயிறு போல் இவரது உணர்வொளி ஊடுருவி நின்று பேரொளி செய்கின்றது. இவர் காட்ட உலகம் காண்கின்றது. இவர் ஆட்ட உலகம் ஆடுகின்றது. தாம் அசையாது நின்று உலகத்தை இவர் அசைத்து வருகின்றார். தாம் இட்டது சட்டமாய்க் காலாந்தரத்தில் கட்டளையாகி வருதலால் மனுக்குலத்திற்கெல்லாம் இவர் ஒர் தனியான இனிய நியமன கர்த்தர்களாய் நிலவி நிற்கின்றார். தம்மை யாரும் நியமியாமலே தாமே எல்லார்க்கும் விதி விலக்குகளை நியமித்து உலகத்தை இவர் இயக்கி யருள்கின்றார்.

இந்நிலை இந்நாட்டில் மட்டும் அன்று எந்நாட்டிலும் எம் மொழியிலும் செம்மொழிப் புலவர் எல்லாரிடமும் இத்தலைமைத் தன்மை தனியே இசைந்திருக்கின்றது. ஷெல்லி என்னும் ஆங்கிலப் புலவர் சொல்லியுள்ளபடியை அடியில் பார்க்க.

“Poets are the unacknowledged legislators of the world”

Shelley.

"கவிஞர்கள் உலகிற்கு ஒரு தனியான சட்ட நிரூபணர்கள்"

எனவரும் இதனால் புவிக்கும் கவிக்கும் உள்ள உறவுரிமை இனிது புலனாம். இன்னார் விதித்தார் அவ்விதிவழியேஒழுகி வருகின்றாேம் என்று எண்ணாமலே மனிதசமூகம் அறிஞர் ஆணைவழி இயல்பாக இயங்கி வருகின்றது. கண்ணுள் ஒளிபோல் கலைஞர் மண்ணுள் மருவியுள்ளார். வாலறிவனது பேரருள் பெற்று நூலறிவு சுரந்து ஞாலம் உய்யச் சீலம் தாங்கி மேலும் படைக்கும் மேன்மை வாய்ந்து போதம் பொலிந்திருத்தலால் போதனோடு புலவர்நேர் ஓத நின்றார். படைக்கும் ஆற்றல் இருவரிடமும் ஒரு நிலையில் பதிந்துள்ளமையான் இவ்வாறு நேராகப் பாராட்ட நேர்ந்தது. இருவகைப் படைப்பு நிலையையும் அடியில் காண்க :

“பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல
சொல்லால் பொருட்கிட னாக உணர்வினில்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்.” (நன்னூல்)