பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியின் பெருமை

23


அவ் வுயரின்பத்தை அநுபவிக்கும்பொழுது உள்ளம் கிளர்ந்து உயிர்ப் பண்பு வளர்ந்து வருதலால் அற நலங்களெல்லாம் அதனோடு உடனெழுகின்றன. பொறி யின்பங்களில் வெறி மண்டி நிற்றலால் அதில் தரும நிலை குன்றிச் சிறுமைகள் மிகுகின்றன. பொறி அறிவிலும் அறிவு நுகர்விலும் உள்ள இழிவும், உயர்வும் முறையே இதனால் எளிது புலனாம்.

அமிர்தத்தைப் பருகினவன் அதன் சுவையை இன்னதென்று பிறர்க்கு எளிது புலனாம்படி இலகுவாக உணர்த்த முடியாது; அது போலவே கவிச் சுவையும் உள்ளது. ஆயினும், இந்த அறிவின்பம் உயிர்களுக்கு இயற்கையாக உள்ளுற உறைந்திருத்தலால் அதனை அறிந்து அநுபவித்து ஆனந்தம் அடைந்துள்ள மதிமான்கள் அச் சுவையைத் தெளிவாக உரைத்தருளின் அது எல்லாருடைய இரு தயங்களிலும் இனிது புலனாய்த் தனியே உவகையை விளைக்கின்றது.

செறிவு தெளிவு செம்மை தண்மை அமைதி இனிமை இயலொ ழுங்கு இன்னோசை முதலிய உயர் நலங்களெல்லாம் கவிகளில் ஒருங்கே அமைந்துள்ளமையால் அவற்றை ஓதுந்தோறும் உணருந் தோறும் தானாகவே இன்பம் மீதூருகின்றது. மனிதனது உள்ளத்திலும் உயிரிலும் கலந்து பொதிந்து உறைந்து கிடக்கின்ற உணர் வின்பமானது கவியோசையைக் கேட்டவுடனே தலை நிமிர்ந்து விரைந்தெழுந்து அதனோடு அநுநாதம் செய்கின்றது.

கவியின்பம் கலையறிவில் கனிந்து விளைந்துள்ளமையால் அது புலமை யுலகில் தலைமை பெற்றுள்ளது.

கற்புத் தெய்வமாகிய சீதையின் அற்புத உருவிற்குக் கவியின் பத்தைக் கம்பர் ஒப்புரைத்துள்ளார். பொன்னின் சோதி பூவின் மணம் தேனின் சுவை என மேனியின் ஒளி முதலியவற்றிற்கு உவமை கூறி வந்த அவர் முடிவில் “செஞ்சொற் கவி யின்பம்” என்று அப் பேரழகியின் குண சவுந்தரியங்களை உணர்வொளி ததும்ப, உரைத்திருக்கின்றார். கவியின் சுவையில் அவர் கருத் தூறியுள்ள உண்மையும் இதனால் உணரலாகும்.

அன்பு அறம் அருள் அமைதி அறிவு ஆண்மை ஆனந்தம் முதலிய இனிய அமிர்த தாரைகளே இடையறாது சுரந்து என்றும்