பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

கம்பன் கலை நிலை


குன்றாத இன்ப வூற்றாய் நின்று உயிர்களை உண்பித்து உயர்த்தி வருகிற கவிகள் இல்லையேல் இப்புவி வாழ்க்கை புல்லிதாய்ப் புலனழிந்துபோம். கவியானது உலகிற்கு உயிராதாரமாயுள்ளமையால் அது எஞ்ஞான்றும் வற்றாத நீர்ப் பெருக் கமைந்த சீவ_நதியாக எண்ணப்பட்டுள்ளது.

கோதாவரி நதியைக் கம்பர் வருணிக்குங்கால் அதனோடு சிலேடையில் வைத்து ஒப்புரைத்துக் கவியின் அற்புத நிலையை அழகாகக் காட்டியுள்ளார். அப்பாட்டு அடியில் வருவது:

“புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்றாகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறி யளாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென் முெழுக்கமும் தழுவிச் சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.”

(இராமா-ஆரணிய-சூர்ப்ப 1)

அன்று இராம_இலக்குவர் சென்று கண்ட கோதாவரியை இன்று நாம் எல்லாரும் இருந்த இடத்தே மானசக் காட்சியில் கண்டு மகிழும்படி கம்பர் இவ்வாறு காட்டியிருக்கின்றார். இதன் பொருளை ஈண்டு விரிப்பிற் பெருகும்; கருத்தை மட்டும் குறிப்பாகக் காட்டுகின்றேன்.

நதி நீர் ஆனது இடங்கள் தோறும் பரந்து பாய்ந்து எங்கும் இனிய நீர்மையாய் இதம் புரிந்து பயிர்களை வளர்த்து உயிர்களைச் செழிப்பிக்கும்; கவியானது மன்பதைகளிடமெல்லாம் இன்புற மருவி அன்பு அறிவு அமைதி வண்மை சத்தியம் சாந்தம் கருணை வீரம் முதலிய குண கணங்களை விளைத்து உயிர்களை உன்னத நிலையில் உயர்த்தும்; ஆதலால் உயிராதாரமாய் முதன்மை எய்தி யுள்ள கவி இங்கே நதிக்கு உவமையாய் வந்தது.

புற உலகிற்கு நீர் எப்படி இன்றி யமையாததோ அப்படியே அறிவுலகிற்குக் கவி அமைந்திருக்கிறது. நீர் ஓட்டம் உலக ஓட்டத்திற்கு எதுவாதல் போல் கவி ஒழுக்கு உயிரொழுக்குக்குக் காரணமாயுள்ளது. ஆருயிர்க்குப் பேராதரவாயுள்ள நீரோடு நேர் வைத்துக் கவியையும் ஒரு சேர எண்ணி யிருத்தலால் அதன் நீர்மையும் சீர்மையும் நிலை தெரியலாகும்.