பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

கம்பன் கலை நிலை


திருமாலும் கம்பனும்

அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கன்றமுதம் ஈந்த
தம்பிரான் என்னத் தானும் தமிழிலே தாலை நாட்டிக்
கம்பநா டுடைய வள்ளல் கவிச்சக்கரவர்த்தி பார்மேல்
நம்புபா மாலையாலே நரருக்கின் றமுதம் ஈந்தான். (2)

திருமால் பாற்கடலைக் கடைந்து தேவர்கட்கு அமுதம் வழங்கினார்; கம்பர் தமிழ்க் கடலைக் கடைந்து பாவின் தொகுதியாலாய இராம சரிதமாகிய அமிர்தத்தை மக்களுக்குக் கொடுத்தார் என்பதாம். அது அலை அமுதம் ; இது கலை அமுதம். அது உடற்குறுதியாய்ச் சிறிது ஊக்கி நிற்கும்; இது உயிர்க்குறுதி பயந்து என்றும் உயர் பேரின்பம் ஆக்கிவரும் என்க. இதனால் அதனினும் இதற்குள்ள ஏற்றம் இனிது புலனாம். அம்பு=நீர். நீர்த்தொகுதியாகிய ஆழியைக் குறித்து இங்கே அது பாற்கடலை உணர்த்தி நின்றது. சிலை=மலை. கடல் கடைந்தபொழுது மந்தரமலையை மத்தாக நாட்டி யிருந்தமையால் அது சிலை எனச் சுட்ட நேர்த்தது. தால்- நா. நம்பு = விருப்பம்; அன்பு கனிந்த ஆர்வம் என்க. 'நம்பும் மேவும் நசையாகும்மே' என்றது தொல்காப்பியம். கம்பநாடு உடைய வள்ளல் என்றதனால் கம்பரது நாட்டுரிமையும், ஆட்சி நிலையும் அறியநின்றன. அம்பில் சிலை நாட்டி என்றதில் நயம் அறிக.

நூல் வந்த வழி

நாரணன் விளையாட்டெல்லாம் நாரதமுனிவன் கூற
ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான்
சீரணி சோழநாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்
காரணக் கொடையான் கம்பன் தமிழினால் கவி செய்தானே.

கம்பன் காவியத்துக்கு மூலம் கூறியபடியிது. இவர் இருந்து வாழ்ந்த ஊரும் நாடும் இதில் உரைக்கப்பட்டுள்ளன. சீர் அணி, இாண்டிற்கும் தனித்தனி இயையும். பிறர் செய்யும் பொருளுதவி எவ்வளவு பெரிதாயினும் உடலளவில் ஒழிந்துபோம் ; இவரது உணர்வுதவி உலகுயிர் உள்ள அளவும் பூரணமாயூடுருவி யருளும் ஆதலால் காரணக் கொடையான் என நின்றார், கார் போலக் கைம்மாறு கருதாக உதவி; தலைமையான ஈகை: புகழுக்குக் காரணமாகிய கொடை எனவும் அப்பதத்திற்குப் பொருள் காணலாகும்.