பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 புல்லின் இதழ்கள்

‘மனிதன் கீழே விழுந்துவிட்டால், நிமிர்ந்து நிற்கிற வர்கள் ஆட்டி வைக்கிறபடி ஆட வேண்டும் போலிருக்கிறது. இப்படி, நெய்க்கு இட்லியைத் தொட்டுக் கொண்டு தின்று எனக்குப் பழக்கமில்லை காந்தாமணி, சொல்வதைக் கேள். ‘

நான் சொல்லுவதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும் . ஏனென்றால் டாக்டர் சொன்னபடித்தான் நான் செய் கிறேன்’ என்றாள்.

தொட்டதற்கெல்லாம், அம்மாவும் பெண்ணும் டாக்டர் மீது பழியைப் போட்டுவிடுங்கள். எப்படியோ உங்களிடம் வந்து அகப்பட்டுக் கொண்டுவிட்டேன். சொன்னபடி கேட்காத வரை விட மாட்டீர்கள்; ஒழுங் காகக் கேட்டுவிடுகிறேன்.’

“அப்படி வாருங்கள் வழிக்கு. கரும்பு தின்னக் கூலி கேட்கிறீர்களே!’ என்றாள் காந்தாமணி புன்னகை பூத்தவாறு.

அந்தப் பார்வை, மின்னல் வேகத்தில் அவன் விழி வழிப் பாய்ந்து, புலன்கள் அனைத்தையும் ஒரு முறை ஆட்டி அலைக்கழித்துவிட்டது. ஹரியால் ஏறிட்டும் பார்க்க முடியவில்லை.

மந்திரசக்தியால் கட்டுண்டவன் போல் அவள் நீட்டிய கரத்திலிருந்து ஒவல்டினை வாங்கி, மளமளவென்று குடித்துத் தீர்த்தான்.

காலியான பாத்திரங்களை டிரேயில் அடுக்கி எடுத்துக் கொண்டு புறப்பட்டவளை, ‘காந்தாமணி’ என்று ஹரி அழைத்தான்.

அவள் ஆர்வத்தோடு திரும்பிப் பார்த்தாள்.

‘'நீ டிபன் சாப்பிட்டுவிட்டு மாடிக்கு வரும்போது, எனக்கு ஒர் உதவி செய்ய முடியுமா?"