பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. மேகம் கலைந்தது

யாரைப் பற்றி எல்லாரும் பெரிதாகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்களோ, அவர் இப்போது, மற்றவர்களைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். “சுந்தரி அல்லது வசந்தியிடமிருந்து ஒரு கடிதங்கூட வர வில்லையே! அவர்களுக்குக் கோபம் இருப்பது இயற்கை தானே? தந்தையும் மகளுமாகச் சேர்ந்து; தாய்க்கும் மகளுக்குமே பெரும் தீங்கு இழைத்து விட்டோம். சுந்தரியின் வாழ்வை நான் பறித்தேன்; மகளின் வாழ்வை சுசீலா பறித்துக் கொண்டாள்” என்று பாகவதர் அடிக்கடி எண்ணிப் புலம்பினார்.

அவருடைய உடம்பு மிகவும் தேறி வருவதாகப் பார்க்கிறவர்களுக்கெல்லாம் தெரிந்தது: அவருக்கும் புரிந்தது. பங்களுரிலிருந்து மூர்த்தியும் அடிக்கடி வந்து கவனித்துக் கொண்டார். வந்து போகும் போதெல்லாம் தம்பியிடம், பாகவதரை இன்னும் சில மாதத்துக்குள் கச்சேரிக்கு அனுப்பி விட வேண்டும். எங்கே, பார்ப்போம் உன் திறமையை’ என்று உற்சாகப்படுத்தி விட்டுத்தான் போவார்.

ஹரிக்குக் கச்சேரிகள் நிறைய நடந்து கொண்டிருந்தன. நகரத்திலேயும் ஹரியின் புகழ் வெகுவாகப் பரவியது. அவன் பாடாத பிரபல சபாக்கள் இல்லை; அவன் பாடிப் பிரபலமாகாத சபைகளும் இல்லை.

பாகவதர் தம் மூச்சுள்ள போதே சுசீலாவின் கல்யா ணத்தைக் கண்டு களித்து விட விரும்பினார். லட்சுமியம்