பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

 அதே வெற்றி எண்ணுக்காக மீண்டும் ஆட (Let) ஆணை பிறப்பித்துவிடுங்கள். அதுதான் முறையாகும்.

அதற்காக, உங்களுக்கு அடிக்கடி சந்தேகம் வருவதும், அடிக்கடி 'மீண்டும் ஆட' (Let) அனுமதிப்பதும் என்று நிகழும்படி நடந்து கொள்ளாதீர்கள். எதையும் சீராகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தினால் தான் சிறப்பாக இருக்கும். அதுபோல்தான் உங்கள் சந்தேக செயல் முறையும்.

இவ்வாறு ஆட்டத்தினை நடத்திக் கொண்டு வரும் பொழுது, ஆட்ட இறுதி நேரத்தில் பல சிக்கல்கள் நாம் எதிர்பாராத நேரத்தில் வந்து நேர்வதுண்டு. அவற்றையும், தவிர்க்கும் முறைகளையும் இனி காண்போம்.

7. ஆட்டம் முடிவு பெறாமல் நிற்கும் பொழுது

திட்டமிட்டிருப்பது போலவே, போட்டி ஆட்டம் நடைபெற்று, எதிர்பார்த்ததற்கு மேலாகவே திருப்தியுடன் நடந்தேறிவிடுவதும் உண்டு. சில சமயங்களில், எதிர்பாராமல் இடையிலே ஆட்டம் நின்று போய் விடுவதும் உண்டு. அத்தகைய நிலைமையில், நடுவர் நான், தனது இறுதி முடிவினைக் கூறி, ஒரு நிலையான தன்மைக்குக் கொண்டு வர வேண்டும்.

என்ன காரணத்தினால் ஆட்டம் இடையிலே நிறுத்தப்படுகிறது; அதைத் தவிர்த்துத் தொடர விதி முறைகள் எவ்வாறு விளக்கம் தருகின்றன என்பனவற்றை நடுவர் கருத்திலே கொண்டுதான் தனது தீர்ப்பின வழங்க வேண்டும்.