பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

4. மைய ஆட்டக்காரர் (Centre Player)

ஒரு குழுவில் இருக்கும் ஐந்து ஆட்டக்காரர்களில், அது தடுத்தாடும் ஆட்டமாக இருந்தாலும் சரி, அல்லது அடித்தாடும் ஆட்டமாக இருந்தாலும் சரி, நன்றாக ஆடக் கூடிய ஆட்டக்காரரே மைய ஆட்டக்காரராக இடம் பெறுகிறார்.

ஆடுகின்ற திறமையுடன், தனது கடமையைச் சரிவர உணர்ந்தவர்களும், குழுவினை நடத்திச் செல்லும் பெரும் பொறுப்பினை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களும் மட்டுமே சிறந்த மைய ஆட்டக்காரர்களாக விளங்க முடியும்.

மற்ற ஆட்டக்காரர்களைப் போல, ஆடுகளத்திற்குள் நுழைந்து, தனது ஆட்டத்தை ஆடிவிட்டுப் பொறுப்புக் கழிந்துவிட்டதென்று, தட்டிக் கழித்து விட்டுச் செல்கின்ற தன்மையில் அமைந்துவிடுகின்றதல்ல இவரது பணி.

இவர் தனது குழுவின் ஆக்க சக்தியாகவும், ஊக்க சக்தியாகவும் திகழ்கிறார். தனது சக ஆட்டக்காரர்களை உற்சாகப்படுத்தி, ஒற்றுமைப்படுத்தி, ஒருநிலைப்படுத்தி, அவர்களது முழுத்திறமையையும் பரிபூரணமாக வெளிப்படுத்தி விளையாடுகின்ற மனோநிலையையும் திறமையையும் கொண்டுவரும் தூண்டுகோலாகவும் விளங்குகிறார்.

மைய ஆட்டக்காரர் மற்ற ஆட்டக்காரர்களுக்குத் துணையாக, பக்கபலமாக இருக்கிறார். அப்படி இருந்து தான் ஆடவேண்டும். ஆனால், ‘தனக்கு இணையான ஆட்டக்காரர் வேறு யாருமில்லை’ என்ற இறுமாப்பு