பக்கம்:பூமியின் புன்னகை.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீல நயனங்கள்



கால நெடுமையெனும் எழில் தவத்தில்
கருவிருந்தே பிறந்து வந்தாள்

கோல மதிமுகத்திற் சுரிகுழலில்
குங்குமச் செம்பொன் நெற்றியினில்

நீல நயனங்கள் இரண்டாலும்
நீட்டி அளந்து பார்க்குங்கால்

பாலிற் புரள்கின்ற கருநாவற்
பழத்தைப் போலும் நோக்குடையாள்.

பார்த்தே பேசும் பக்குவக் கண்கள்
பார்வையிற் பேசும் பரிமளவிழிகள்

ஊர்த்தேர் விதியில் வருதல்போல்
ஊரே காண வருகின்றாள்

ஆர்த்தே ஒலிக்கும் காற் சலங்கை
யாரிவள் யாரிவள் எனவியக்கப்

பார்த்தோர் தவிக்கப் பாரார் ஏங்கப்
பார்வையே பேசும் மோகன விழிகள்!