பக்கம்:பூமியின் புன்னகை.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

பூமியின் புன்னகை



போட்டி பொறாமை பகைமைகளைச்-சிறு
பொய்ம்மைக் கலகப் பூசல்களைக்

காட்டு மனிதன் வளர்ந்த பினும்-மிகு
காட்டுத் தனமாய் நடப்பதனைக்

கூட்டம் கூடிப் பிரிவதனைத்-தத்தம்
கொள்கைகள் மதங்கள் சாதி என்றே

ஆட்டம் போடுதல் கண்டே-நம்
அன்னை பூமி சிரிக்கின்றாள்!

மனிதனை மனிதன் மாய்ப்பதனைச்-சிலர்
மதங்களின் பெயரால் மடிவதனைக்

கனிதனை விட்டுக்கா யினைநாடலை-வெறும்
கயமையின் வகைகள் கவனமாவதை

அணிதனைச் சேர்த் தழிவுகள் செய்வதை-அண்டை
அயலவர் வாழஅனு மதியாததைப்

பிணிதனைச் சோர்வைப் பீடையை-மனப்
பெருமைகள் இல்லாக் கீழ்மையை

நாள்தோறும் பார்த்துப் பார்த்தே-அவள்
நகைக் கின்றாள் விலாப் புடைக்க

ஊர்தோறும் இடந்தோறும் ஒவ்வொருநாள்-விடியும்
வைகறையும் வகை வகையாய் நிறநிறமாய்ப்

பேர்வேறாய் மணம்வேறாய்ப் பூமித்தாய்-இங்கு
பூப்பூவாய் நகைப்பதையே பார்க்கின்றோம்.

ஆர் வேறு சொன்னாலும் நம்புகிலேன்-இதன்
அந்தரங்கம் நானறிவேன் நன்கறிவேன்!