பக்கம்:பூமியின் புன்னகை.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுமைதாங்கிக் கல்


அன்று


எங்கள் ஊரில் ஒரு பழைய சுமைதாங்கி
ஊருணிக் கரையில் சாலை முனையில்
சேரத் தழைத்த ஆலமரத் தடியில்
'ப'வைக் கவிழ்த்தது போலப் பழைய நாள்

கருங்கலில் வடிவாய்ச் செதுக்கிக் கட்டியது
'மானாக் கானா’ உபயம் என்றதில் எழுத்தும் உண்டு
ஊருக்குள் தேடி வருவோர் போவோர் பாதசாரிகள்
பாரம் சுமப்போர் பசித்தோர் வருந்தியோர் முன்பெலாம்

சுமையை இறக்கிச் சற்றே இளைப்பாறிச்
செல்ல ஆலமரமும் அருஞ்சுமை தாங்கியும்
ஊருணி நீரும் ஒன்றுக்கொன்று அருகருகாக
யாரும் விரும்பிட அமைந்து திகழ்ந்தன