பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 171 அவளது முகத்தைப் பார்த்த சாமண்ணாராவ், அவர் பூர்ண சந்திரோதயம் என்பதைக் கண்டு மிகுந்த பயபக்தி விநயத்தோடு அவளை வரவேற்று, 'வாருங்கள் வாருங்கள், எல்லோரும் இப்போதுதான் சாப்பிட்டு எழுந்து மேலே போய்த் தாம்பூலம் போட்டுக் கொள்ளுகிறார்கள். நீங்கள் வந்திருப்பதாக உள்ளே போய்ச் சொல்லட்டுமா?’ என்றான். உடனே பூர்ணசந்திரோதயம், "உன்னுடைய பெயர் என்ன?” என்றாள். சாமண்ணாராவ், "என்னை சாமண்ண்ாராவ் என்று சொல்லு வார்கள்; என்னைப்பற்றி சாமளராவ் உங்களிடத்தில் சொல்லி யிருப்பாரே என்றான். பூர்ணசந்திரோதயம், 'ஆம். ஆம். சொல்லியிருக்கிறார். இந்தப் பாளையக்காரர் உனக்கு இரண்டரை வருஷமாகச் சம்பளமே கொடுக்கவில்லையாம். என்னிடம் நீ வேலைக்கு வந்துவிடுவதாகச் சொன்னாயாம். அதையெல்லாம் சாமளராவ் என்னிடம் சொன்னார். நாளையதினம் நான் நம்முடைய அரண்மனைக்கே போய்விடப் போகிறேன். உன்னை உடனே அழைத்துக்கொண்டு வந்துவிடும்படி நான் அவருக்கு உத்தரவு கொடுத்திருக்கிறேன். நீ கவலைப்பட வேண்டாம். அங்கே வந்துவிடு' என்றாள். அதைக்கேட்ட சாமண்ணாராவ் நன்றியறிதலும் பணிவும் பொங்கி எழுந்த மனத்தினனாய்க் குனிந்து குனிந்து அவளை மேன்மேலும் அதிகமாக வணங்கி, "எப்படியாவது தாங்கள் இந்த ஏழையை வைத்து ஆதரிக்க வேண்டும். எனக்கு வேறே பிழைக்கும் மார்க்கமில்லை. இங்கே மாடுமாதிரி உழைத்து விட்டுப் போய் வீட்டில் பட்டினி கிடக்க வேண்டியிருக்கிறது. அதுபோகட்டும்; எஜமான் இவ்விடத்தில் நிற்பது சரியல்ல. தங்களுக்கு என்ன காரியம் ஆக வேண்டும்? சொன்னால் அதன்படி நடந்து கொள்ளுகிறேன்' என்றான்.